செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறு கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் சாலமன்(40). இவரும் அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த்(28) என்பவரும் மரம் வாங்கி கரிசுட்டு வியாபாரம் செய்துள்ளனர். நேற்றுமுன்தினம் செஞ்சி நாட்டேரி வெள்ளக்குளம் அருகே இருவரும் மர கரி சுடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பிரசாந்த்- சாலமன் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சாலமனுக்கு ஆதரவாக அவரது மகன் தமிழ்(24), மோகன்(23), வெற்றி(19) ஆகியோரும் பிரசாத்துக்கு ஆதரவாக அவரது சகலைகள் மணிகண்டன், மற்றொரு மணிகண்டன், தர்மதுரை, பிரசாந்த் மனைவி உஷா ஆகியோர் வந்து தகராறு செய்துள்ளனர்.
இதில் தமிழ், மோகன் ஆகியோருக்கு லேசான காயமும் வெற்றி என்பவருக்கு தலையில் காயமும் ஏற்பட்டது. வெற்றி செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்தார். இதன்பிறகு அன்றைய இரவே வெற்றிக்கு மீண்டும் வெற்றிக்கு தலைவலி அதிகமானதால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்து, பின்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து இவரது உறவினர்களுக்கு மருத்துவர்கள் தகவல் கொடுத்தனர். இதுசம்பந்தமாக செஞ்சி காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் பிரசாந்த், மணிகண்டன், திட்டக்குடி மணிகண்டன், தர்மதுரை, பிரசாந்த் மனைவி உஷா ஆகிய ஐந்து பேரை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது வெற்றியின் உறவினர்கள் உடனடியாக இவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று செஞ்சிகூட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சென்று மறியலில் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘’உரிய விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று டிஎஸ்பி கார்த்திகா பிரியா உறுதி அளித்தார். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
The post தொழில் போட்டியில் கோஷ்டி மோதல்; செஞ்சியில் வாலிபர் கொலை: உறவினர்கள் மறியலால் பதற்றம் appeared first on Dinakaran.