தொழிலாளி மர்ம சாவில் திடீர் திருப்பம் மருமகளுடன் தகாத உறவு கண்டித்ததால் படுகொலை

1 month ago 6

*ரூ. 1 லட்சம் கொடுத்து தீர்த்துக்கட்டிய மாஜி ராணுவ வீரர்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கூலித்தொழிலாளியை கள்ளக்காதல், பணம் விவகாரத்தில் கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவத்தில், மாஜி ராணுவ வீரரான சித்தப்பா உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த அச்சமங்கலம் அருகே உள்ள ஏ.நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (43), கூலித் தொழிலாளி. இவரது மனைவி வள்ளியம்மாள் (27). இவர்களின் மகன்களுக்கு காய்ச்சல் இருந்ததால், பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்திருந்தனர்.

மணிகண்டன் கடந்த 1ம் தேதி மதியம், தனது மனைவியை மருத்துவமனையில் விட்டு விட்டு, வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். ஆனால் வீட்டிற்கும் செல்லவில்லை, மருத்துவமனைக்கும் திரும்பவில்லை. இது குறித்து, வள்ளியம்மாள் பர்கூர் போலீசில், தனது கணவரை காணவில்லை என புகார் அளித்தார். கடந்த 3ம் தேதி மதியம், பர்கூர் அருகே நாகமங்கலத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில், மணிகண்டன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மணிகண்டனின் தாயார் மீனாட்சி அளித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

நாகமங்கலம் அருகே அச்சமங்கலம் கூட்டுரோடு பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, கடந்த 1ம் தேதி மதியம் 2 மணிக்கு, டூவீலரில் மணிகண்டன் உள்பட 4 பேர் சென்றது தெரியவந்தது. அவருடன் சென்றது யார்? என போலீசார் விசாரணை நடத்தியதில், மணிகண்டனின் சித்தப்பாவான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நாகராஜன் (63), அச்சமங்கலம் கூட்டுரோட்டில் பேக்கரி நடத்தி வரும் பழனிகுமார் (43), அச்சமங்கலத்தை சேர்ந்த ராஜ்குமார் என தெரியவந்தது. இதனிடையே, அவர்கள் மாயமானதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

இந்நிலையில், நாகராஜன், பழனிகுமார், ராஜ்குமார் ஆகிய 3 பேரும், அச்சமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் முன்னிலையில் நேற்று சரணடைந்தனர். அப்போது, மணிகண்டனை தாங்கள் கிணற்றில் தள்ளி, கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, 3 பேரும் கந்திகுப்பம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணையில், அவர்கள் கூறியதாக போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட மணிகண்டனுக்கு வள்ளியம்மாள் என்ற மனைவி உள்ளார். மணிகண்டனின் சித்தப்பாவான மாஜி ராணுவ வீரர் நாகராஜனுக்கும் வள்ளியம்மாளுக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதனை பயன்படுத்தி வள்ளியம்மாள் நாகராஜனிடம் பணம் வாங்கி வந்துள்ளார். அதேபோல மணிகண்டனும் அடிக்கடி பணம் வாங்கி வந்துள்ளார். இவ்வாறாக கணவன், மனைவி இருவரும் ₹17 லட்சம் வரையில் கடனாக வாங்கியுள்ளனர்.

இந்நிலையில் நாகராஜன் கொடுத்த பணத்தை மணிகண்டனிடம் திரும்ப கேட்டார். அப்போது மணிகண்டன், நீ என் பொண்டாட்டியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறாய். அதற்கும் பணத்திற்கும் சாரியா போச்சு, எதற்காக என்னிடம் பணம் கேட்கிறாய் என கேட்டுள்ளார். இதனால் மணிகண்டனுக்கும், நாகராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜன், மணிகண்டனை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார். அதன்படி தனக்கு தெரிந்த பழனிகுமார், ராஜ்குமார் ஆகியோரை அழைத்து மணிகண்டன் எனக்கு ₹17 லட்சம் தராமல் இருக்கிறான்.

மேலும் கேட்டால் என்னை ஏளனமாக அவமானமாக பேசுகிறான். ₹1 லட்சம் உங்களுக்கு தருகிறேன். அவனை தீர்த்துக் கட்டி விட வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு சம்மதித்த 2 பேரும், மணிகண்டனை மது குடிக்க கடந்த 1ம் தேதி பர்கூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அச்சமங்கலம் கூட்டு ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கிய அவர்கள் 2 இருசக்கர வாகனத்தில் நாகமங்கலம் பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகில் அழைத்துச் சென்று, அங்கு அமர்ந்து மது குடித்துள்ளனர்.

அப்போது போதையில் இருந்த மணிகண்டனை 60 அடி ஆழ கிணற்றுக்குள் தள்ளி விட்டனர். இதில் அவர் நீரில் மூழ்கி பலியானார். இதன் பிறகு 3 பேரும் எதுவும் தெரியாததைப்போல அங்கிருந்து சென்று விட்டனர். இதனிடையே போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து தங்களை தேடுவதை அறிந்த 3 பேரும் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சரண் அடைந்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தொழிலாளி மர்ம சாவில் திடீர் திருப்பம் மருமகளுடன் தகாத உறவு கண்டித்ததால் படுகொலை appeared first on Dinakaran.

Read Entire Article