சாத்தான்குளம், ஜன. 4: சாத்தான்குளம் அருகேயுள்ள போலையர்புரத்தை சேர்ந்தவர் அருள்ராஜ். இவர், கடந்த 2015ம் ஆண்டு விளையாட்டு மைதானத்தில் நின்ற போது அங்கு வந்த இதே ஊரைச் சேர்ந்த ராபின்சன் (36), விஜய் (39), அருமைநேரு (44) ஆகியோர் மதுபோதையில் அவரிடம் தகராறு செய்து தாக்கியதுடன் அருள்ராஜ் உதட்டை கடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த அருள்ராஜ், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக தட்டார்மடம் போலீசார் வழக்கு பதிந்து 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சாத்தான்குளம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் ராபின்சன் மரணமடைந்ததால் மற்ற 2 பேர் மீதான விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு நீதிபதி வரதராஜன் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விஜய்க்கு ₹20 ஆயிரம் அபராதமும், அருமைநேரு இழப்பீடு தொகையாக ₹10 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
The post தொழிலாளி உதட்டை கடித்து காயப்படுத்திய இருவருக்கு அபராதம்: நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.