ஊத்துக்கோட்டை: தொளவேடு-ஏனம்பாக்கம் இடையே ஆரணியாற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் பல வருடமாக உடைந்து கிடக்கும் தடுப்புச்சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என கிராமமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஊத்துக்கோட்டை அருகே, எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது தொளவேடு கிராமம். இக்கிராமத்தைச் சுற்றி காக்கவாக்கம், தும்பாக்கம், கல்பட்டு, மாளந்தூர், ஆவாஜிபேட்டை, மேல்மாளிகைப்பட்டு, கீழ்மாளிகைப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்லவும், கிராமத்தையொட்டி உள்ள தொளவேடு-ஏனம்பாக்கம் இடையே ஆரணியாற்றில் இறங்கி தண்டலம் சென்று அங்கிருந்து பெரியபாளையம், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். மழைக் காலத்தில் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தால் இந்த 20 கிராம மக்களும் செங்காத்தாகுளம் மற்றும் வெங்கல், சீத்தஞ்சேரி கிராமங்களின் வழியாகவும் 10 முதல் 20 கிமீ தூரம் சுற்றிக்கொண்டும் செல்ல வேண்டும் என்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில், தொளவேடு-ஏனம்பாக்கம் ஆரணியாற்றின் இடையே கடந்த 2011-2012ம் ஆண்டு ரூ.6 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால், 20 கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில், இந்த மேம்பாலத்தின் தடுப்புச்சுவர் கடந்த 8 வருடத்திற்கு முன்பு உடைந்துவிட்டது. இதனால், இரவு நேரத்தில் இக்கிராமங்களுக்குச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், நடைபாதையாக செல்லும் மக்களும் மேம்பாலத்தை பயன்படுத்த அச்சப்படுகின்றனர்.
மேலும், இப்பாலத்தின் வழியாக விவசாயிகள் தங்களது ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் செல்லும்போது எதிர்பாரதவிதமாக ஆடு, மாடுகள் பாலத்தில் இருந்து தவறி கிழே விழுந்து உயிரிழந்து விடுகின்றன. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு, பாலத்தின் தடுப்புகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post தொளவேடு-ஏனம்பாக்கம் இடையே உடைந்து காணப்படும் மேம்பால தடுப்புச்சுவர்: சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.