*ஆல் இந்தியா வேர்ல்ட் ரெக்கார்டில் இடம் பிடித்தார்
ஸ்ரீவைகுண்டம் : தொல்காப்பியத்தில் உள்ள 1602 நூற்பாக்களையும் 28.40 மணி நேரத்தில் தொல்காப்பியர் படத்திற்குள் எழுதி ஸ்ரீவைகுண்டம் அரசு பள்ளி தமிழ் ஆசிரியை சாதனை படைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கீழகல்லாம்பாறையை சேர்ந்தவர் ராமலெட்சுமி, ஸ்ரீவைகுண்டம் நாராயணம்மாள்புரம் நாகன்காலனியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் தமிழ் மொழி தொடர்பான குறிப்புகள், தமிழ் புலவர்கள் குறித்து தனிப்பட்ட முறையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் தனியார் ஆர்ட் அண்ட் கிராப்ட் அகாடமி வடிவமைத்துள்ள தொல்காப்பியர் படத்திற்குள் தொல்காப்பியத்திலுள்ள 1602 நூற்பாக்களையும், 28 மணி நேரம் 40 நிமிடத்திற்குள் எழுதி சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து, ஆசிரியை ராமலெட்சுமி கூறுகையில், ‘தொல்காப்பியம் தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழ்மொழியின் சிறப்புகளை மாணவ, மாணவிகள் அறிந்திடவும் ஏதுவாக இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டேன். ஆல் இந்தியா வேல்ர்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் மூலமாக இந்த சாதனை முயற்சியில் குறிப்பிட்டப்படி வெற்றி பெற்றுள்ளேன்.
எனது இந்த சாதனைக்கு பள்ளி தலைமையாசிரியை ஆனந்தவல்லி, ஆசிரியை அபிராமி, எனது கணவர் நவீன்குமார், குழந்தைகள் ஐஸ்வர்யா, சபரிஷியாம் மற்றும் நண்பர்கள் உதவியாக இருந்தனர். தமிழ்மொழி மீதான சாதனைகளை தொடர்ந்து மேற்கொள்வேன்’ என்றார். தமிழ் ஆசிரியை ராமலெட்சுமி மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
The post தொல்காப்பியர் படத்திற்குள் 28.40 மணி நேரத்திற்குள் 1602 நூற்பாக்களை எழுதி அரசு பள்ளி தமிழ் ஆசிரியை சாதனை appeared first on Dinakaran.