அகமதாபாத்: ஐபிஎல் டி 20 தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்சும், குஜராத் டைட்டன்சும் மோதுகின்றன. ஒரு போட்டி தடைக்கு பின் இன்று கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்குவது மும்பை அணியின் பலத் தை அதிகரித்திருக்கிறது. மும்பையை பொறுத்தவரை சூர்யகுமார் யாதவ் கடந்த ஓராண்டாகவே பார்மின்றி தவித்து வருவதும், மாஜி கேப்டன் ரோகித் சர்மாவின் சமீபத்திய பார்மும் கவலையளிக்கிறது. இவர்கள் இருவரும் பார்முக்கு திரும்பினால் மும்பையின் ரன் வேட்டையை யாரும் தடுக்க முடியாது.
தென் ஆப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் ரியான் ரிக்கெல்டனும் முதல் போட்டியில் சோபிக்காதபட்சத்தில் இன்று அதிரடியில் இறங்கினால் மும்பை அணிக்கு சிறந்த துவக்கம் கிடைக்கலாம். மேலும் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் வருகை பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பலம் சேர்க்கக்கூடும். சுழற்பந்து வீச்சை பொறுத்தவரை கடந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய விக்னேஷ் புதூர் நம்பிக்கை அளிக்கிறார். ஆனால் சேப்பாக்கத்தில் நிகழ்த்திய `மாயாஜாலத்தை’ அகமதாபாத் மைதானத்தில் அவர் நிகழ்த்துவாரா என்பது கேள்விக்குறிதான். அகமதாபாத் பிட்சின் தன்மை வேறுவிதமாக இருக்கும்.
சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி தனது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் இறுதி வரை போராடி வெற்றியை பறிகொடுத்தது. குறிப்பாக இறுதி ஓவர்களில் பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் வைடு யார்க்கர் பந்துகளை சமாளிக்க முடியாமல் குஜராத் அணி பேட்ஸ்மேன்கள் திணறினர். மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பாண்டியாவும் இறுதி ஓவர்களில் வைடு யார்க்கர் பந்துகளை வீசுவதில் திறன் வாய்ந்தவர் என்பதால் அவரது பந்துவீச்சை குஜராத் பேட்ஸ்மேன்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தென் ஆப்பிரிக்க வேகம் ரபாடா, ஆப்கன் சுழல் ரஷித்கான் ஆகியோரின் பந்துவீச்சு கடந்த போட்டியில் எடுபடவில்லை. இதனால் இன்றைய போட்டியில் பந்து வீச்சாளர்களில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம். கடந்த போட்டியில் பேட்டிங்கில் ஜொலித்த சாய்சுதர்சன், ஜாஸ் பட்லரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான இன்னிங்சை எதிர்பார்க்கலாம். மேலும் இன்றைய போட்டியில் கிளென் பிலிப்ஸ் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர் பகுதி நேர சுழற்பந்து வீச்சிலும் கைகொடுக்கக்கூடியவர். இரு அணி வீரர்களும் முதல் வெற்றியை பதிவு செய்ய வரிந்துகட்டுவார்கள் என்பதால் இன்று அகமதாபாத் மைதானம் அதகளப்படும் என்பதில் சந்தேகமில்லை. ரசிகர்களும் வீரர்களின் வாணவேடிக்கையை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
The post ஹர்திக் வருகை கூடுதல் பலம்; முதல் வெற்றிக்காக வரிந்துகட்டும் மும்பை – குஜராத்: அகமதாபாத்தில் இன்று அதிரடி appeared first on Dinakaran.