சென்னை: 18வது சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடந்த 8வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன் குவித்தது. கேப்டன் ரஜத் படிதார் 51, பில் சால்ட் 32, கோஹ்லி 31, தேவ்தத் படிக்கல் 27, டிம்டேவிட் 22 ரன் எடுத்தனர். சிஎஸ்கே பவுலிங்கில் நூர் அகமது 3, பத்திரனா 2 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா 41, திரிபாதி 5, தீபக்ஹுடா 4, சாம்கரன் 8, சிவம் துபே 19, ஜடேஜா 25 ரன்னில் அவுட் ஆக டோனி நாட்அவுட்டாக 16 பந்தில் 30 ரன் எடுத்தார். சிஎஸ்கே 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களே எடுத்தது. இதனால் 50 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றிபெற்றது. அந்த அணியின் பவுலிங்கில் ஹேசல்வுட் 3, யாஷ் தயாள், லிவிங்ஸ்டன் தலா 2 விக்கெட் எடுத்தனர். கேப்டன் ரஜத் படிதார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
வெற்றிக்கு பின் அவர் கூறுகையில், இந்த ஆடுகளத்தில் நாங்கள் எடுத்த ஸ்கோர் மிகவும் சிறப்பானது. ஏனென்றால் பந்து கொஞ்சம் நின்று வந்தது. இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்ப்பது என்பது கடினமாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் பவுண்டரி, சிக்ஸர் அடிப்பது கடினமாக இருந்தது. சிஎஸ்கே ரசிகர்கள் முன் இந்த வெற்றியை நாங்கள் பெற்றிருப்பது ஸ்பெஷலானது. நாங்கள் 200 பிளஸ் ரன் எடுக்கவேண்டும் என்று நினைத்தோம். இந்த இலக்கை சேஸ் செய்வது கடினம் என நன்றாக தெரியும். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் நான் இன்னிங்ஸ் தொடக்கத்திலே சுழற்பந்துவீச்சை அதிக அளவு பயன்படுத்தினேன். ஹேசல்வுட் ஆட்டத்தையே திருப்பும் அளவுக்கு பந்து வீச்சை வெளி கொண்டு வந்தார். முதல் 6 ஓவரிலே 3 விக்கெட் வீழ்த்தியது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது, என்றார்.முதல் போட்டியில் கேகே ஆரை வீழ்த்திய ஆர்சிபி இந்த வெற்றி மூலம் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.
50 ரன் வித்தியாசத்தில் தோற்றது மகிழ்ச்சி தான்;
சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், “இந்த பிட்சில் 170 ரன் தான் சிறந்த ஸ்கோர் என்று கருதுகிறேன். ஃபீல்டிங்கில் எங்களுக்கு மோசமான நாளாக அமைந்தது. பல கேட்சுகளை தவறவிட்டோம். அதுதான் தோல்விக்கு காரணம். இதுபோன்ற பந்து நின்று வரும் பிட்சில், கூடுதலாக 20 ரன்களை சேஸிங் செய்வது எளிதல்ல. அதற்கு கொஞ்சம் வித்தியாசமாக பேட்டிங் செய்ய வேண்டும். நான் பேட்டிங் ஆடும்போது பிட்ச் இன்னும் ஸ்லோவாகவும், நின்றும் வரத் தொடங்கியது. மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்காதது மகிழ்ச்சிதான் வெறும் 50 ரன் தான் வித்தியாசம்’’ என்றார்.
17 ஆண்டுக்கு பின் சேப்பாக்கத்தில் வெற்றி;
* ஆர்சிபி அணி சிஎஸ்கேவுக்கு எதிராக சேப்பாக்கத்தில் முதல் ஐபிஎல் சீசனில் (2008ல்) வென்றிருந்தது. அதன்பின்னர் 17 ஆண்டுக்கு பின் தற்போது தான் சிஎஸ்கேவை வீழ்த்தி உள்ளது.
* ஐபிஎல் வரலாற்றில் சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக நேற்று 50 ரன் வித்தியாசத்தில் வென்றதுதான அதிக ரன் வித்தியாச வெற்றியாகும். இதற்கு முன் மும்பை 46 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
* சிஎஸ்கே கேப்டனாக ருதுராஜ் 3வது முறையாக டக்அவுட் ஆனார். டோனி 7 முறை டக்அவுட் ஆகி உள்ளார்.
* சிஎஸ்கேவுக்காக அதிக ரன் எடுத்த வீரர் பட்டியலில் சுரேஷ் ரெய்னாவை (4687) டோனி (4699) முந்தினார்.
The post சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை சுருட்டியது ஆர்சிபி; முதல் 6 ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தியது தான் வெற்றிக்கு காரணம்: கேப்டன் ரஜத் படிதார் பேட்டி appeared first on Dinakaran.