லக்னோ: உத்தர பிரதேசத்தில் தொலைபேசியில் மூன்று முறை தலாக் என கணவர் கூறி விவாகரத்து செய்ததால், மனைவி தற்கொலை செய்து கொண்டார். உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சானியா என்ற இளம்பெண்ணுக்கும், மஹாராஷ்டிராவில் வேலை பார்க்கும் சலாவுதீன் என்பவருக்கும், கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பேசியபடி, சானியாவின் பெற்றோர் வரதட்சணை மற்றும் சீர் பொருட்களை கணவர் குடும்பத்திற்கு வழங்கினர். அது போதாது என கூறி, சலாவுதீனின் சகோதரியர் மூவர் மற்றும் தாய் தொடர்ந்து பலமுறை சானியாவை தொந்தரவு செய்து வந்தனர். அதற்கு தீர்வு காண முயற்சி எடுத்தும், சித்ரவதை தொடர்ந்தது. அதனால் கடந்த 26-ந் தேதி, அந்த இளம்பெண் தனது தாயாரின் இல்லத்துக்கு வந்து விட்டார்.
இதனையடுத்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு இளம்பெண்ணும், அவருடைய தாயாரும் சென்று போலீசில் புகார் கூறினார். இதனால் அவரது வீட்டுக்கு சென்று விசாரித்த எஸ்.ஐ., ஜெய்பிரகாஷ் சிங், வழக்கு எதையும் பதிவு செய்யவில்லை. இந்நிலையில், தாய் வீட்டில் இருந்த மனைவி சானியாவை, சமீபத்தில் போனில் அழைத்த சலாவுதீன், நீண்ட நேரம் பேசிய பின், மனைவியிடம் மூன்று முறை ‘தலாக்’ என கூறி, விவாகரத்து செய்வதாக தெரிவித்தார். இதனால் மனமுடைந்த சானியா அன்று இரவே வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விவகாரம் குறித்து அறிந்த எஸ்.பி., கவுரவ் குரோவர், புகார் தெரிவித்தும், வழக்கு பதிவு செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக கூறி, எஸ்.ஐ., ஜெய்பிரகாஷ் சிங்கை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார். மேலும், துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டார். இதனையடுத்து இளம்பெண்ணின் கணவர் சலாவுதின் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஆண்கள், மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை சட்டவிரோதம் என, உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, முத்தலாக்கிற்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவும் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post தொலைபேசியில் முத்தலாக் சொன்ன கணவரால் விபரீதம்: உத்திரப் பிரதேசத்தில் மனைவி தற்கொலை! appeared first on Dinakaran.