அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

11 hours ago 4

சென்னை: அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் 5 முக்கிய உத்தரவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் சமீபகாலமாக தெரு நாய்கள் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி விட்டது. குறிப்பாக, சாலையோரங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் முதியோர்கள், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளை கடிப்பது, விரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.

குறிப்பாக குழந்தைகளை விரட்டி விரட்டி கடிக்கின்றன. சிறுவர்கள் விபரம் தெரியாமல் ஓடுவதால், அவர்களை விரட்டிச் சென்று கடிக்க ஆரம்பித்து விடுகின்றன. இதனால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிக்கப்படுகின்றனர். சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

சென்னையில் இரவு நேரத்தில் வீடுகளுக்குச் செல்லவே அச்சமாக உள்ளது. குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை விரட்டி, விரட்டி கடிக்கத் தொடங்குகிறது. ஒரு நாய் கத்த ஆரம்பித்தவுடன் பக்கத்து தெருக்களில் இருந்து கூட மொத்தமாக கூடி மக்களை விரட்டத் தொடங்கி விடுகிறது. இதனால் மக்கள் ஒருவித அச்சத்துடன்தான் இரவில் தெருக்களில் செல்லக்கூடிய நிலை தற்போது உள்ளது.

இதனால், தெரு நாய்களின் தொல்லைகளில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில், நாய்களை பொது இடங்களில் திரிய விட்டால், உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று அண்மையில் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது. தெரு நாய்களுக்கு பாவம் என்று கூறி பொதுமக்கள் சாப்பாடு, சிக்கன், மட்டன் என்று உணவு வகைகளை கொடுக்கின்றனர். இதனால் தெரு நாய்கள் வெளியில் செல்லாமல் தெருக்களிலேயே சுற்றி சுற்றி வருகிறது. கடந்த சில நாட்களாக தெருவுக்கு 10 நாய்கள் நடமாடுகின்றன.

மேலும் பல வீடுகளில் வளர்ப்பு நாய்களை கூட வெளியில் விட்டு விடுகின்றனர். இதனால், விதிகளை கடைப்பிடிக்காத நாய்களின் உரிமையாளர்கள் பற்றி புகார் அளிக்க 1913 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு எடுக்கப்பட்ட நாய்களுக்கான கணக்கெடுப்பில் 1 லட்சத்து 30 ஆயிரம் நாய்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

நாய்களுக்கு கருத்தடை தடுப்பூசி போடப்படாத நிலையில், இப்போது இவற்றின் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்திருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் ஆலோசனை கூட்டத்தில் 5 முக்கிய உத்தரவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். அவைகள் பின்வருமாறு;

* அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

* நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்வது தொடர்பாக மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்க அறிவுறுத்தல்.

* கால்நடை அறிவியல் பல்கலை. மற்றும் அதன் விரிவாக்க மையங்களில் கருத்தடை பணிகளை மேற்கொள்ள உத்தரவு

* உடல்நலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை மீட்டு சிகிச்சை அளிக்க காப்பகங்களை
உருவாக்க உத்தரவு

* அனைத்து துறைகளும் இணைந்து நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு

The post அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article