நீலகிரி: நீலகிரி தொட்டபெட்டா காட்சிமுனையில் முகாமிட்டுள்ள காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழ்நாடு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. குன்னூர் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு இருந்த ஒற்றை காட்டு யானை தொட்டபெட்ட மலை சிகரத்துக்கு இடம் பெயர்ந்தது. குன்னூர் வன பகுதிக்கு விரட்ட முயன்றபோது காட்டு யானை உதகை நகருக்குள் புகுந்ததுள்ளது. இதன்காரணமாக பாதுகாப்பு கருதி இன்று (மே 6ம் தேதி) ஒருநாள் தொட்டாபெட்டா காட்சிமுனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்து உத்தரவிட்டது.
நீலகிரி மாவட்டத்கில் தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் ஏராளமான காட்டு யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக கூடலூர் மற்றும் குன்னுர் பகுதிகளில் யானைகள் வர தொடங்கியுள்ளது. கடந்த ஒருவார காலமாக ஆண் ஒற்றை காட்டு யானை குன்னுர் மலைப்பாதை வழியாக குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு இருந்தது. கடந்த சில நாட்களாக அந்த ஒற்றையானையை வனபகுதிக்குள் விரட்ட குன்னுர் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். நேற்றைய தினம் யானை 15 கிமீ தொலைவில் உள்ள தொட்டபெட்டா மலை சிகர வனப்பகுதிக்குள் வந்தது. ஒற்றை காட்டு யானையை வனபகுதிக்குள் விரட்ட குன்னுர் வனத்துறையினர், உதவி வனத்துறையினர் 40 பேர் குழுக்களாக இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆனால் யானை உதகை நகருக்குள் புகுந்து இரவு முழுவதும் நகரின் முக்கிய வீதிகளில் சுற்றி திரிந்ததால் வனப்பகுதிக்குள் விரட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து யானை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். யானையை விரட்ட கடினமாக உள்ளதால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழ்நாடு வனத்துறை முதன்மை தலைமை வனத்துறை பாதுகாவலர் அனுமதி வழங்கி உள்ளார். இதனையடுத்து முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வன கால்நடை மருத்துவர் மற்றும் யானை பாகன்கள், வேட்டைத்தடுப்பு காவலர்களும் வரவழைக்கப்பட்டுள்ளார். தற்போது யானை எங்கே உள்ளது என்பதை ட்ரோன் கேமரா மூலம் தேடி வருகின்றனர். யானை தென்பட்டவுடன் மயக்க ஊசி செலுத்தி வாகனத்தில் ஏற்றி வனபகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
The post தொட்டபெட்டா காட்சிமுனையில் முகாமிட்டுள்ள காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழ்நாடு வனத்துறை உத்தரவு appeared first on Dinakaran.