
புதுடெல்லி,
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது. இதில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
எல்லையோரத்தில் பூஞ்ச், பாரமுல்லா, குப்வாரா, ஜம்மு, சம்பா, கத்துவா, ரஜோரி மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. ஸ்ரீநகர் விமான நிலையத்தையொட்டிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டன. இதுபோல, காஷ்மீர் பல்கலையின் அனைத்து தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
போர் சூழல் காரணமாக பஞ்சாம் மாநிலம் குருதாஸ்பூரில் இரவில் முழுமையாக மின் தடை செய்யப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் பல்வேறு துறை செயலாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது நாடு முக்கியமான கால கட்டத்தில் உள்ளது. தொடர்ந்து விழிப்போடு இருக்க வேண்டும். மாநில அதிகாரிகள், கள நிறுவனங்களுடன் இணைந்து நெருங்கிய ஒத்துழைப்பை பேண்ட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். தற்போதுள்ள சூழலில் அமைச்சங்களின் திட்டமிடல் ஆயத்தம் உள்ளிட்டவற்றை மோடி மதிப்பீடு செய்தார். முன்னதாக ,டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார்.