இந்தியா பதற்றத்தை ஏற்படுத்தவில்லை; பதிலடி மட்டுமே கொடுக்கிறது - மத்திய அரசு விளக்கம்

3 hours ago 1

புதுடெல்லி,

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா மே 7-ந்தேதி(நேற்று) அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் 4 இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாதிகள் உள்ள அலுவலகங்கள், பயிற்சி முகாம்கள், அவர்களது வசிப்பிடங்கள் என 21 பயங்கரவாத நிலைகளை தரைமட்டமாக்கின.

இதற்கிடையில் இந்தியாவில் உள்ள 15 நகரங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டதாகவும், பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஊடகங்களுக்கு விளக்கமளித்தனர். அப்போது பேசிய கர்னல் சோபியா குரேஷி, "ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்திய ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயன்றது. பாகிஸ்தான் ஏவுகணைகளை இந்தியாவின் வான் பாதுகாப்பு கட்டமைப்பு நடுவானிலேயே தடுத்து தாக்குதலை முறியடித்தது. பாகிஸ்தான் நடத்த இருந்த ஏவுகணை, டிரோன் தாக்குதல்கள் தோல்வியடைந்தன" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

"பஹல்காம் தாக்குதல்தான் இந்த பிரச்சினைகளுக்கான தொடக்கப்புள்ளி. லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு கட்டமைப்பை இந்திய ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்தது. பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தவில்லை. அதே சமயம் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 16 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையம் என்ற பெயரை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இந்தியாவால் கொல்லப்பட்டவர்களுக்கு ராணுவ மரியாதை அளித்து இறுதிச்சடங்கு நடந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு அரசு மரியாதை அளிப்பது பாகிஸ்தானில் வழக்கமாக உள்ளது.

இந்தியா குறித்து பொய் தகவல்களை பாகிஸ்தான் பரப்பி வருகிறது. பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு மத வழிபாட்டு தளங்களையும் குறித்து இந்தியா தாக்குதல் நடத்தவில்லை. இந்தியாவில் அணைகள் போன்ற கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.

பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள்தான். இந்தியாவின் நோக்கம் பயங்கரவாதிகளை தாக்குவது மட்டுமே, மக்களை அல்ல. மேற்கொண்டு பாகிஸ்தான் தாக்கினால் உரிய பதிலடி தரப்படும்.

பிரச்சினையை பெரிதாக்க பாகிஸ்தான் முயல்கிறது. இந்தியா பதற்றத்தை ஏற்படுத்தவில்லை, பதிலடி மட்டுமே கொடுக்கிறது. இந்தியாவின் பதில் நடவடிக்கை மீது வகுப்புவாத சாயம் பூச பாகிஸ்தான் முயற்சிக்கிறது. இந்தியா குறித்து பொய் தகவல்களை பாகிஸ்தான் பரப்பி வருகிறது.

ஐ.நா. அறிக்கையில் TRF பயங்கரவாத அமைப்பின் பெயரை குறிப்பிட வேண்டாம் என பாகிஸ்தான் தடுத்தது. பாகிஸ்தானின் பயங்கரவாத தொடர்பை உலகிற்கு இந்தியா அம்பலப்படுத்தியுள்ளது. ஆதாரங்களை அளித்த பிறகும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்ததை பாகிஸ்தான் தலைவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரவில்லை என பாகிஸ்தான் கூறியது பொய் என நிரூபணமாகியுள்ளது. மசூத் அசார் உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தஞ்சம் அளித்தது.

நாட்டின் பாதுகாப்புக்காக பதிலடி கொடுக்க வேண்டியது கட்டாயம். இந்தியாவின் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் பெயர்களை வெளியிடுவதற்கு இது சரியான நேரம் அல்ல.

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தான் மீறியது. சிந்து நதி ஒப்பந்தம் குறித்து விவாதிக்க பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் இல்லை.

பாகிஸ்தான் எப்போது உருவானதோ அப்போதே அவர்கள் பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். பாகிஸ்தான் மீது சர்வதேச நாணய நிதியம் தாமாக முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக அமைச்சரவை குழு உள்ளிட்ட அமைப்புகள் சூழலை பொறுத்து முடிவெடுக்கும். பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். கொடூர தாக்குதலுக்கு ஆளான இந்தியாவின் பதிலடிக்கு உலக தலைவர்கள் மதிப்பளித்துள்ளனர்."

இவ்வாறு விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

Read Entire Article