லாஸ் ஏஞ்சல்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல் முறையாக திரும்பிய மக்கள் தங்களின் வீடுகள் கருகிப் போய் கிடப்பதை பார்த்து கடும் வேதனை அடைந்தனர். இந்த பேரழிவை தடுக்கத் தவறியதற்கான காரணத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 7ம் தேதி காட்டுத்தீ பரவத் தொடங்கியது.
கடந்த 8 மாதங்களாக மழை பெய்யாத இப்பகுதியில், அதிவேக உஷ்ண காற்றின் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த காட்டுத் தீ, மலைப்பகுதிகளில் மட்டுமின்றி பசிபிக் பலிசடீஸ், அல்டடேனா உள்ளிட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் வேகமாக பரவியது. இதனால் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். 4 நாட்களுக்கு பிறகு தற்போது காற்றின் வேகம் சற்று குறைந்துள்ளதால் காட்டுத் தீ சில பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அல்டடேனா உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல் முறையாக மக்கள் நேற்று தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். அப்போது பலரது வீடுகள் முற்றிலும் எரிந்து புகைந்து கொண்டிருப்பதைப் பார்த்து கடும் வேதனை அடைந்தனர். 20, 30 ஆண்டாக வாழ்ந்த வீடு கருகி கிடப்பதைப் பார்த்து பலர் குடும்பத்துடன் செய்வதறியாது நின்றனர். பசிபிக் பலிசடீஸ் பகுதியில் காட்டுத் தீ மேலும் பரவி வருவதால் அதை ஒட்டிய இன்டர்ஸ்டேட் 405, கெட்டி மியூசியம் ஆகிய பகுதிகளில் இருந்தும் மக்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த காட்டுத் தீயில் 11 பேர் பலியாகி உள்ளனர். 12,000 கட்டிடங்கள் எரிந்து நாசமாகி உள்ளன. வரலாறு காணாத இந்த காட்டுத்தீயால் 60,000 வீடுகள், வணிக கட்டிடங்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி உள்ளன. தீயை அணைக்க தீயணைப்பு துறை தொடர்ந்து போராடி வரும் நிலையில், தீயை அணைக்க முடியாததற்கான காரணத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டுமென மக்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். இதனால் அரசு நிர்வாகத்தில் ஒருவர் மீது ஒருவர் பழிபோடும் படலமும் தொடங்கி உள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் தரையில் அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பான்களில் 4 கோடி லிட்டர் தண்ணீர் மாயமானது குறித்து தனிப்பட்ட விசாரணைக்கு கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் உத்தரவிட்டுள்ளார். தீயணைப்பு துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்ததுதான் நகரை பாதுகாக்க போதிய ஏற்பாடுகளை செய்ய முடியாததற்கு காரணம் என லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்பு துறை தலைவர் கிறிஸ்டின் க்ரோவ்லி கூறி உள்ளார். தீ பரவி வரும் பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் தீத்தடுப்பு ரசாயனங்கள் தூவப்பட்டு வரும் நிலையில், கனடாவிலிருந்து தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் 200 தீயணைப்பு வீரர்கள் உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
The post தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்ஸ் பேரழிவுக்கு யார் காரணம்? கருகிய வீடுகளை நேரில் பார்த்து மக்கள் வேதனை appeared first on Dinakaran.