சென்னை: சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.63,000ஐ தாண்டியது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 1ம் தேதி தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. அன்றைய தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு பவுன் ரூ.62,320க்கு விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவில், வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான நேற்று முன்தினம் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.7,705க்கும், பவுனுக்கு ரூ.680 குறைந்து ஒரு பவுன் ரூ.61,640க்கும் விற்பனையானது.
இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது. இந்த ஆறுதல் என்பது ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று மீண்டும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,810க்கும், பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு பவுன் ரூ.62,480க்கு விற்பனையானது. அதே போல் இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.760 உயர்ந்து சவரனுக்கு ரூ.63,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.7,905க்கு விற்பனையாகிறது.
இதன் மூலம் இதற்கு முன்னர் இருந்த அனைத்து விலை உச்சத்தையும் முறியடித்து புதிய உச்சத்தை தங்கம் விலை கண்டது.இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் விலை உயர்வு என்பது விஷேசத்திற்காக நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ, சீனா, கனடா ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு, ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைப்பு குறித்த அறிவிப்பு இல்லாதது போன்ற காரணங்களே தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும் என்று தங்க நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,07,000க்கும் விற்பனையானது.
The post தொடர்ந்து அதிர்ச்சி அளிக்கும் ஆபரணத் தங்கத்தின் விலை : ஒரு சவரன் ரூ.63,000ஐ தாண்டியது… கிராம் ரூ.7,905க்கு விற்பனை!! appeared first on Dinakaran.