தொடர்ந்து 3வது ஆண்டாக பிப்.15 முதல் 24 வரை காசி தமிழ் சங்கமம்

2 weeks ago 7

புதுடெல்லி: தொடர்ந்து 3வது ஆண்டாக பிப்.15 முதல் பிப்.24 வரை காசி தமிழ் சங்கமம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையேயான தொடர்பை புதுப்பிக்க கடந்த 2022ம் ஆண்டு முதல் முறையாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஒன்றிய அரசால் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஒரு மாதம் நடந்தது. இரண்டாவது முறையாக 2023ல் டிசம்பர் 17 முதல் டிசம்பர் 30 வரை காசி தமிழ்சங்கமம் நடந்தது. தற்போது தொடர்ந்து 3வது ஆண்டாக பிப்.15 முதல் பிப்.24 வரை காசி தமிழ் சங்கமம் நடைபெறும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்தார்.

தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 1,000பேர் இந்த நிகழ்ச்சியில் 5 குழுக்களாக பங்கேற்க உள்ளனர். இந்த 5 குழுக்களிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள், தொழில் வல்லுநர்கள், சிறு தொழில்முனைவோர் உட்பட பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் இடம் பெறுவார்கள். மேலும் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களில் இருந்தும் 200 தமிழ் மாணவர்களைக் கொண்ட ஒரு குழுவும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள். இவர்கள் அனைவரும் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்திக்கும் செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரயாக்ராஜ் நகரில் நடக்கும் மகா கும்பமேளா நிகழ்ச்சியிலும் இவர்கள் பங்கேற்று புனித நீராடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான காசி தமிழ் சங்கமத்தின் கருப்பொருளாக சித்த மருத்துவ முறை (பாரதிய சிகித்சா), செம்மொழியான தமிழ் இலக்கியம், நாட்டின் கலாச்சார ஒற்றுமை ஆகியவற்றில் அகஸ்திய முனிவரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில் இடம் பெற்றுள்ளது. இதில் பங்கேற்க kashitamil.iitm.ac.in என்ற இணையதளத்தில், பிப்ரவரி 1-ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

The post தொடர்ந்து 3வது ஆண்டாக பிப்.15 முதல் 24 வரை காசி தமிழ் சங்கமம் appeared first on Dinakaran.

Read Entire Article