
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான குற்றாலத்தில், அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழ்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.
தற்போது குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக இருக்கும் நிலையில், ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று காலை முதல் குற்றாலம் மெயின் அருவியில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் உற்சாக குளியலில் ஈடுபட்டு, புகைப்படம் எடுத்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், குற்றாலம் அருவிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.