பெங்களூரு: பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒட்டுமொத்தமாக இடிந்து விழுந்தது. இதில் ஒருவர் பலியானார், 15க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெங்களூரு, கே.ஆர்.புரம் பாபுசாப் பாளையத்தில் 6 அடுக்கு குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. கட்டிட பணியில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்காக அவர்கள் கட்டிடத்தின் உள்ளேயே குடும்பத்துடன் தங்கி இருந்தார்கள். தரைத்தளம் மற்றும் 6 மாடிகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் டைல்ஸ் பதிக்கும் பணி தற்போது நடந்து கொண்டிருந்தது. இந்த பணியில் சுமார் 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
தொடர்ந்து மழை பெய்து ஈரத்தன்மை அதிகம் இருந்த நிலையில் கட்டிடம் உறுதிதன்மையை இழந்து நேற்று மாலை 3.40 மணிக்கு சீட்டுகட்டு சரிவது போல் ஒவ்வொரு மாடியும் கீழே சரிந்து இடிந்தது. அப்போது வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் அபயக்குரல் எழுப்பினர். அந்த கட்டிடத்தின் உள்ளே தொழிலாளர்களின் குடும்பமும் இருந்ததால் குழந்தைகள், பெண்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் விரைவாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கிய நபர்களை மீட்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
ஆனாலும், போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றுவதற்கு ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீட்கப்பட்ட நபர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய நபர்களின் எண்ணிக்கை தெரியாத நிலையில் காயம் அடைந்த நபர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘10க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கட்டிட உரிமையாளர் இன்ஜினியர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.
The post தொடர் மழையால் பெங்களூருவில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: இடிபாடுகளில் சிக்கிய 10க்கும் மேற்பட்டோர் மீட்பு appeared first on Dinakaran.