மேட்டூர்: விவசாயிகளுக்கு திமுக அரசு எந்த நன்மையும் செய்யவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த எம்.காளிப்பட்டியில், மேட்டூர் அணையின் உபரி நீரைக் கொண்டு 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை கொண்டு வந்ததற்காக, அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமிக்கு, காவிரி உபரிநீர் நடவடிக்கை குழு, அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் பழனிசாமி பேசியதாவது: விவசாயிகளின் துயரம் குறித்து முழுமையாக தெரிந்ததால்தான் 100 ஏரிகளுக்கு உபரிநீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்தினேன். இந்த திட்டத்தில் விடுபட்ட ஏரிகளில், மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் நீர் நிரப்பப்படும். அதேபோல, கோதாவரி- காவிரி இணைப்பு திட்டமும் செயல்படுத்தப்படும். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை, ஆட்சிப் பொறுப்பேற்று 42 மாதங்களாகியும் திமுக முடிக்கவில்லை. விவசாயிகளுக்கு திமுக அரசு எந்த நன்மையும் செய்யவில்லை.