தென்காசி,
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தென்தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும் எனவும், இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தென் தமிழகத்தில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தென்காசி மாவட்டத்திலும் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அரை நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், இன்று பிற்பகலில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.