பெஞ்சல் புயலின்போது திருவண்ணாமலையில் பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாக கடந்த 1ம் தேதி மாலை வ.உ.சி.நகர் பகுதியில் தீபம் ஏற்றும் மலை மீது திடீர் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் சுமார் 30 டன் எடைகொண்ட ராட்சத பாறையும் உருண்டு விழுந்ததில் ஒரு வீட்டில் இருந்த ராஜ்குமார், அவரது மனைவி, குழந்தைகள், உறவினரின் குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 13ம் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை மீது ஏறி தரிசிப்பது வழக்கம். ஆனால் தற்போது தீபமலையில் அவ்வப்போது மண் சரிவு ஏற்பட்டு வருவதால், மலை மீது பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக நேற்று காலை 7 மணிக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பிரேமலதா, புவியியல் துறை வல்லுநர்கள் ஆறுமுகநயினார், ஜெயபால், சுந்தரராமன், லட்சுமி ராம்பிரசாத், சுரேஷ்குமார், அருள்முருகன், தமிழரசன் என 8 பேர் கொண்ட குழுவினர் கள ஆய்வுக்கு சென்றனர்.
இக்குழுவுடன் காவல்துறை சார்பாக பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் குழு மற்றும் பாம்புக்கடி, விஷப்பூச்சி எதிர் மருந்து, ரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் கருவிகள், தூக்குப்படுக்கை உள்ளிட்டவை அடங்கிய மருத்துவர் தலைமையிலான மருத்துவக்குழுவும் உடன் சென்றது. மேலும் வனத்துறை குழு, தீயணைப்புத்துறை சார்பாக தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் 20 நபர்கள் கொண்ட மீட்புக்குழுவும் உடன் சென்றது. மலையடிவாரத்தில் பாதுகாப்பு கருதி ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு மீட்பு வாகனம் ஆகியவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த வல்லுநர் குழுவினர் மலைப்பகுதிக்கு சென்று மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது அங்குள்ள மண்ணின் தன்மை மற்றும் பாறைகளின் தன்மை குறித்து ஆய்வு நடத்தினர். நேற்று மாலை வரை மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இந்த குழு ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவுகள் குறித்து வல்லுநர் குழு இன்று அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மகா தீபத்தின்போது குறைந்த அளவில் பக்தர்களை அனுமதிப்பதா? அல்லது மகாதீபம் ஏற்றுவர்களை தவிர மற்ற அனைத்து பக்தர்களுக்கும் மலையேற முற்றிலும் தடைவிதிப்பதா என நாளை அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post தொடர் மண்சரிவு எதிரொலி: தீபமலையில் பக்தர்கள் ஏற அனுமதியா 8 பேர் கொண்ட வல்லுநர் குழு ஆய்வு appeared first on Dinakaran.