மெல்போர்ன்,
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜாவுடன் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க நாதன் மெக்ஸ்வீனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தொடக்க ஆட்டக்காரர் இடத்திற்கு மெக்ஸ்வீனி சரியான தேர்வா..? இல்லையா..? என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்தியாவுக்கு எதிரான பார்டர்- கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவுள்ள நாதன் மெக்ஸ்வீனி எப்படி செயல்படுவார் என்பதை காலம்தான் முடிவு செய்யும். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் என்ற முறையில், தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு நாதன் மெக்ஸ்வீனி நல்ல தேர்வு எனக் கூறுவேன்.
எந்த இடத்தில் களமிறங்கி விளையாடுகிறோம் என்பது முக்கியமில்லை. ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் பண்புகளையும், தரத்தினையும் ஒருவர் பெற்றிருக்க வேண்டும். நாதன் மெக்ஸ்வீனியை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால், அவர் மிகவும் திறமையான வீரர் என்பதையும் அவரிடம் தலைமைப் பண்பு இருப்பதையும் உறுதி செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி, அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க முன்வந்துள்ளார்.
ரோம் நகரம் ஒரே நாளில் கட்டி எழுப்பப்படவில்லை. அதே போல்தான் டேவிட் வார்னரும். அவர் மிகச் சிறந்த வீரராக ஒரு நாளில் உருவாகிவிடவில்லை. அவரது இடத்தை நிரப்புவது மிகவும் கடினமான விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.