பெங்களூரு: மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வது தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் அநீதியாக இருக்கும் என்றும், மக்களவையில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்றும் காங்கிரஸ் தலைவர் கார்கே கூறினார். கர்நாடக மாநிலம் கடக்கில் நடைபெற்ற முன்னாள் கர்நாடக அமைச்சர் கே.எச். பாட்டீலின் நூற்றாண்டு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், ‘மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வது தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் அநீதியாக இருக்கும்.
அதன் மூலம் மக்களவையில் தென்மாநில மக்கள் பிரதிநிதிகளின் பிரதிநிதித்துவம் குறையும் தொகுதி மறு வரையறை மூலம் வட மாநில தொகுதிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் மாநிலங்களை சேர்ந்த அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்றுபட்டு போராட அழைப்பு விடுத்துள்ளனர். கூட்டாட்சி பற்றி பேசும் ஒன்றிய அரசு, மக்களுக்கு அத்தியாவசியப் பணிகளுக்கான மானியங்களை ஏன் குறைக்கிறது? கர்நாடகாவில் கூட்டுறவு வங்கிகளுக்கான நிதியில் நபார்டு 58 சதவீத குறைப்பை விதித்துள்ளது.
இதன் விளைவாக இந்த ஆண்டு லட்சக்கணக்கான விவசாயிகள் பயிர்க் கடன்களைப் பெறவில்லை’ என்று குற்றம்சாட்டினார். மக்களவை தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்பு குறித்து தமிழக அரசின் சார்பில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் வரும் 22ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி 7 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதையடுத்து திமுகவின் அமைச்சர்கள், எம்.பி.க்கள் கொண்ட குழுக்கள் அந்த மாநிலங்களுக்கு சென்று முதல்வர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலினின் அழைப்பு கடிதத்தை வழங்கி, கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வது தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் அநீதி: கார்கே ஆவேசம்! appeared first on Dinakaran.