மதுரை: தொகுதி மறுவரையறை என்ற பெயரில் கூட்டாட்சி சிதைக்கப்படுகிறது. பாஜ ஆட்சியை அகற்றினால்தான் நாட்டில் சுயாட்சி காப்பாற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. 2ம் நாளான நேற்று கட்சியின் பிரதிநிதிகள் மாநாடு நடந்தது. தொடர்ந்து மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில், ‘கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை’ என்ற தலைப்பில் மாநில உரிமைக்கான பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தது.
இந்த கருத்தரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திமுக – கம்யூனிஸ்ட் இடையேயான நட்புறவை தகர்க்க சிலர் தொடர்ந்து முயன்று வருகின்றனர். சமத்துவ சமுதாயத்தை அமைக்கவே நாம் கூட்டணி வைத்துள்ளோம். கூட்டாட்சி என்ற சொல்லே ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜியாக உள்ளது. ஒன்றிய அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவது நானும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் தான்.
மாநில சுயாட்சி என்பது திமுகவின் உயிர் கொள்கை. அண்ணாவும், கலைஞரும் அதனை உயிராகக் கருதினர். அண்ணாவின் உயில் என கருதப்படும் இறுதிக் கடிதத்தில் மாநில சுயாட்சியை வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களின் உரிமைகளை காக்க முதன்முதலாக தீர்மானம் இயற்றியவர் கலைஞர். உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று 1974ம் ஆண்டு சட்டப் பேரவை தீர்மானத்தில் பேசியவர் கலைஞர். மோடி தலைமையிலான ஆட்சி, மாநிலங்களை அழிக்கிற, மாநில மொழிகளை சிதைக்கிற, அரசியல் அமைப்புகளை டம்மியாக்கும் ஆட்சியாக உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என ஒற்றைத்தன்மையைக் கொண்டு வர ஒன்றிய அரசு துடிக்கிறது. இது தனிமனித அதிகாரத்திற்கு வழி வகுக்கும்.
மக்கள் நலன் என்ற ஒற்றைப் புள்ளியில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒன்றியத்தில் பாஜ கூட்டணி ஆட்சி அகற்றப்பட்டால் தான் நாட்டில் சுயாட்சி காப்பாற்றப்படும். பிரதமருக்கு கேள்வி: ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகளை வலிமைப்படுத்த அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று 2012ல் குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி கேட்டார். நான் இந்த மேடையில் இருந்தவாறு, பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். தொடர்ந்து 3வது முறையாக பிரதமரான நிலையில், சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? இன்னும் 2 நாட்களில் தமிழ்நாட்டிற்கு வரவுள்ள நிலையில், இதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்.
பல்வேறு சட்டங்கள் மூலம் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கிறீர்களே? ஜிஎஸ்டி மூலம் மாநில அரசுகளின் நிதி உரிமையை எடுத்துக் கொண்டீர்களே? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில சட்டப் பேரவைகளில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு அனுமதியே தருவதில்லை. ஒன்றிய அரசு சார்பில் சிறப்புத் திட்டங்கள் கொடுப்பதில்லை.
அரசியலமைப்பு சட்டத்தின் தத்துவமான கூட்டாட்சி என்பதை தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் சிதைக்க முயற்சிக்கிறது ஒன்றிய பாஜ கூட்டணி அரசு. தொகுதி மறுசீரமைப்பை இன்னும் 25 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க கூட்டு நடவடிக்கைக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், பிரதமர் இதுவரை இதற்கு பதில் அளிக்கவில்லை. அரசியல் சட்ட உரிமைகளை பறிக்கும் ஆட்சியை நடத்திக் ெகாண்டிருக்கிறது பாஜ. மக்களுக்கு எதிரான பாஜ ஆட்சிக்கு முடிவுரை எழுதினால்தான், பாஜவுக்கு மாற்றாக இந்தியாவில் ஒரு கூட்டாட்சி மலரும். அதற்காக ஒத்த கருத்துள்ள ஜனநாயக சக்திகளை திரட்டுவோம். இதற்காக திமுகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் குரல் கொடுக்கின்றன. இணைந்து போராடுவோம். பாசிசத்தை வீழ்த்துவோம்.
இவ்வாறு பேசினார்.
பாஜ ஆளாத மாநிலங்களில் ஆளுநர் தலையீடு அதிகரிப்பு: பிரகாஷ் காரத் குற்றச்ாட்டு
மார்க்சிஸ்ட் மாநாட்டில் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பேசுகையில், ‘‘இந்திய சுதந்திரத்திற்கு பின் எப்போதும் இல்லாத அளவில் கூட்டாட்சி தத்துவத்தின் மீது கடுமையான தாக்குதல்கள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. மாநில அரசுகள் மீது ஆளுநர்களின் தலையீடுகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் நடந்துள்ளன. பாஜ அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள், அரசின் செயல்பாடுகளில் அதிகம் தலையீடு செய்கின்றனர்.
இயற்கை பேரிடர்களில் கூட ஒன்றிய அரசு நிதி வழங்குவதில்லை. அரசமைப்பு, கூட்டாட்சி, ஜனநாயகத்திற்கு இந்த ஆட்சியில் பெரிய அச்சுறுத்தல் உள்ளது. தொகுதி மறுவரையறை நடவடிக்கை மூலம் 2026க்கு பிறகு தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பெரும் சமநிலையின்மை ஏற்படும். கூட்டாட்சி தத்துவத்தை காப்பாற்ற அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்’’ என்றார்.
பாஜ தலைவர்களாக மாறும் ஆளுநர்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் பேசுகையில், ‘‘எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை, பாஜ தலைவர்களாக மாற்றி, முழு நேர அரசியல்வாதிகளாக செயல்பட வைக்கிறார்கள். மாநிலங்களின் வளர்ச்சியை தடுக்கிறீர்கள். பாஜவுக்கு எதிரான மாநில அரசுகளை மிரட்டுகிறீர்கள். ஆட்சிகளை கவிழ்க்கிறீர்கள். கட்சிகளை உடைக்கிறீர்கள். கட்சி மாற கட்டாயப்படுத்துகிறீர்கள். இன்னும் சொல்லப் போனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என நினைக்கிறீர்கள்’’ என்றார்.
‘மு.க.ஸ்டாலின் பிரதர்… மூத்த சகோதரர் பினராய்’
கருத்தரங்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ‘எல்லோருக்கும் வணக்கம்’ என்றும், பிரகாஷ் காரத் ‘வணக்கம்’ என்றும், கர்நாடக உயர்கல்வி அமைச்சர் சுதாகர், ‘அனைவருக்கும் என்னுடைய வணக்கம்’ என்றும் தமிழில் தெரிவித்து பேச்சை துவக்கினர். கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பேசும்போது, ‘பிரதர்’ என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்து மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘கேரள முதலமைச்சர் என்னை பிரதர் என்றார். உண்மைதான். எனக்கு அவர் மூத்த சகோதரர்’ என்றார்.
எம்.பி தந்தை படத்திற்கு நேரில் அஞ்சலி
மதுரை எம்பி சு.வெங்கடேசனின் தந்தை சுப்புராம் சமீபத்தில் மறைந்தார். இதையடுத்து நேற்று மதுரை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாலை ஹார்விபட்்டியில் உள்ள சு.வெங்கடேசனின் வீட்டிற்கு சென்று, அவரது தந்தை இறந்தது குறித்து கேட்டறிந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த சுப்புராமின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
எழுந்து நின்று முதல்வருக்கு நன்றி
காரல் மார்க்சிற்கு சென்னையில் சிலை வைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கருத்தரங்கில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று நன்றி தெரிவித்தனர். இதேபோல இடதுசாரி தலைவரான பார்வர்டு பிளாக் தலைவர் மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைப்பதாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து, மார்க்ஸ், ஏங்கல்ஸ் உருவம் பொறித்த சிற்பம் பரிசாக வழங்கப்பட்டது.
The post தொகுதி மறுவரையறை என்ற பெயரில் கூட்டாட்சி சிதைப்பு; பாஜ ஆட்சியை அகற்றினால்தான் நாட்டில் சுயாட்சி காப்பாற்றப்படும்: மார்க்சிஸ்ட் மாநாட்டு கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.