சென்னை: தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழக அமைச்சர்கள் தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். உதகமண்டலத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முடிவுற்ற திட்டப் பணிகளையும் திறந்து வைத்து முதல்வர் பேசுகையில், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க சதி செய்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மிகப்பெரிய சதி நடக்க இருப்பதை முதன்முதலில் உணர்ந்து அரசுக்கு எதிராக குரல் கொடுத்த மாநிலம் தமிழ்நாடுதான்.
வரவிருக்கின்ற மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், மேற்கொள்ளப்போகிற தொகுதி மறுசீரமைப்பு, நம்மைப் போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கப் போகிறது. மக்கள் தொகையை பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாக கட்டுப்படுத்திய நம்மைப் போன்ற மாநிலங்கள்- நாடாளுமன்றத் தொகுதிகள் எண்ணிக்கையை பெரிய அளவில் இழக்க நேரிடும்” என்று பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய இந்த வீடியோவை தமிழக அமைச்சர்கள் தங்களுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘தொகுதி மறுசீரமைப்பு செய்தால் மக்கள் தொகையை பல்வேறு திட்டங்கள் மூலம் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை இழக்கும் அபாயம் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார். பிற அமைச்சர்களின் பதிவுகள் பின்வருமாறு:
அமைச்சர் எஸ்.ரகுபதி: தொகுதி மறுசீரமைப்புத் திட்டம், என்பது தமிழ்நாட்டின் குரலை வலுவிழக்கச் செய்து, வட மாநிலங்களுக்கு கூடுதலான அதிகாரம் அளிக்கும் அரசியல் சூழ்ச்சியாகும்.
அமைச்சர் கீதா ஜீவன்: தொகுதி மறுசீரமைப்புத் திட்டம் மூலம் தென்னிந்திய மாநிலங்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றத்தில் இழக்கும் அபாயம் ஏற்படும்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்: தொகுதி மறுசீரமைப்புத் திட்டம், நாட்டின் அரசியல் சமநிலையை சிதைக்கிறது.
அமைச்சர் ராஜகண்ணப்பன்: நியாமற்ற இந்த தொகுதி மறுசீரமைப்பு எனும் சதியை முறியடித்து, நியாயமான தொகுதி மறுசீரமைப்பு கிடைக்கும் வரை போராடுவோம்!
அமைச்சர் பி.மூர்த்தி: தொகுதி மறுசீரமைப்புத் திட்டம், வட இந்தியாவின் பிரதிநிதித்துவத்தை உயர்த்தி, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கிறது.
அமைச்சர் சி.வீ.மெய்யநாதன்: தமிழ்நாடு உட்பட தென் இந்தியாவில் வாழும் பலகோடி மக்களின் உரிமையை தொகுதி மறுசீரமைப்புத்திட்டம் பாதிக்கிறது. இவ்வாறு தங்களுடைய கருத்தை பதிவிட்டுள்ளனர்.
The post தொகுதி மறுசீரமைப்புக்கு அமைச்சர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.