சென்னை: தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா எங்களை சந்திக்காதது வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் கடந்த 2 நாட்களாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை நடந்தது. நேற்று முன்தினம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்களுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். நேற்றைய தினம் மீதமுள்ள மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:
அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று நிர்வாகிகளின் கருத்துகளை 15 நாட்களுக்குள் கேட்டறிய உள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தற்போதும் இருக்கிறோம் என்பது எங்கள் நிலைப்பாடு. இரட்டை இலை சின்னம் ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்காலிகமாகவே அதிமுகவுக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த நிலைதான் தற்போது வரை உள்ளது. அதன் காரணமாகவே நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சை சின்னத்தில் நான் நின்றேன். 2ம் இடம் பிடித்தேன். 6 ஓ.பன்னீர்செல்வத்தை நிறுத்தினர். ஆனாலும் 3 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றேன். எங்கள் நியாயங்களுக்கான நல்ல தீர்ப்பாக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.
உள்துறை அமைச்சர் தமிழகம் வந்தபோது எங்களை அழைக்காதது எங்களுக்கு வருத்தமளிப்பதாகவே உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நட்டா அறிவித்த வேட்பாளர் பட்டியலில் என்னுடைய பெயரும் இருந்தது. யாருடனும் மறைமுக பேச்சுவார்த்தையில் நான் ஈடுபடவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகதான் தலைமை என சொல்கிறீர்கள். கூட்டணியில் 9 கட்சிகள் உள்ளன. 9 கட்சிகளும் பேசி முடிவெடுத்த பின்னரே யார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கும் என்பது தெரியவரும். அதிமுகவை உருவாக்கியவர்கள் இன்னும் இருக்கின்றனர். அவர்களை சந்தித்து கருத்துகளை கேட்க உள்ளோம்.
விஜய் கட்சி தொடங்கி இன்றளவில் சரியான இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அவர் கட்சி தொடங்கியவுடனேயே அதை வரவேற்றேன். அவரது செயல்பாடுகளை பார்த்த பின்பே அவர் கட்சி குறித்து கருத்து கூற முடியும். உள்துறை அமைச்சரை சந்திக்க நாங்கள் நேரம் கேட்கவில்லை. நயினார் நாகேந்திரன் எனது நல்ல நண்பர், அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.
அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று நிர்வாகிகளை சந்தித்த பின் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை எடுப்போம். பணம் இருப்போர் மட்டுமே அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் நிலை உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் போராடி வருகிறோம். அதிமுக தொடர்பாக 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மூல வழக்கில் வழங்கப்போகிற தீர்ப்பே இறுதி தீர்ப்பாக அமையும். இதுவரை சொல்லப்பட்ட எந்த தீர்ப்பும் செல்லாது. மூல வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.
தர்ம யுத்தத்தின் பிறகு இணைந்தபோது நான்தான் ஒருங்கிணைப்பாளர் என்பதை அவர் ஏற்றார். அவர் முதல்வர் என்பதை நான் ஏற்றுக் கொண்டேன். கட்சி இணையும்போது சில பொதுவான கருத்துகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். என்னை வந்து சந்தித்தவர்கள் அது பற்றி வெளியில் கூறாமல் இருக்கின்றனர். நான் அதுபற்றி கூறினால் அது அரசியல் தர்மம் அல்ல. அதிமுகவின் 6 தலைவர்கள் தொடர்ந்து என்னுடன் பேசி வருகின்றனர். எந்த காலத்திலும் பாஜவுடன் கூட்டணி கிடையாது என்றவர் எடப்பாடி பழனிசாமி. அவரது நிலைப்பாடு இப்போது மாறி உள்ளது. கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஈடுபட்டோருக்கு தண்டனை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியது எங்களது தொண்டர் உரிமை மீட்புக் குழுதான். இவ்வாறு அவர் கூறினார்.
The post தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறோம்; தமிழ்நாட்டுக்கு வந்த அமித்ஷா எங்களை சந்திக்காதது வருத்தம்தான்: ஓபிஎஸ் வேதனை appeared first on Dinakaran.