சென்னை: “எங்கள் கூட்டணியில் விரிசல் விழாது” என்று தனது பிறந்தநாள் விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் இருக்கும் பாஜகவினருக்கும் சேர்த்து நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்துக்குத் துணையாக நில்லுங்கள். தயவு செய்து உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதீர்கள்” என்றார்.
சென்னை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ. மைதானத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின், 72-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியது: “2019-ல் இருந்து கொள்கைக் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று வரும் நாம், 2026-லும் அடைய இருக்கும் வெற்றிக்குத் தொடக்க விழா மேடை இது. கருத்தியல் கூட்டணி அமைத்திருக்கும் எங்களுக்குள் கருத்து மாறுதல் வரும். ஆனால், விரிசல் வராது. எங்களின் ஒற்றுமையை எரிச்சலுடன் பார்த்து, விரிசல் வருமா என்று சிலர் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கலாம். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, உங்களின் ஆசையில்தான் மண் விழுமே தவிர, எங்கள் கூட்டணியில் விரிசல் விழாது.