சமூக நீதி அரசு

4 hours ago 3

தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் 50 சதவீதமாக ஏற்கனவே உயர்த்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றது. இதன்மூலம் அரசியலில் பெண்களுக்கான இடத்தை தவிர்க்க இயலாததாக மாற்றி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் சரி பாதியாக பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்திய நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை 33 சதவீதமாக உயர்த்த பல ஆண்டுகாலம் போராட வேண்டிய நிலை ஏற்பட்டு ஒரு வழியாக நாடாளுமன்றத்தில் சமீபத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் நடைமுறைப்படுத்தாத சூழல்தான் இருந்து வருகின்றது.

இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் நீதிக் கட்சி ஆட்சியில் 1921ம் ஆண்டு பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் எம்எல்ஏவாக தமிழ்நாட்டில் இருந்து டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். 1929ம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார், பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். இப்படி பெண்களின் உரிமைகளுக்காக தமிழ்நாடு என்றைக்குமே முன்னோடியாக விளங்கி வந்துள்ளது.

பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை இன மக்களுக்கும், பெண்களுக்கும் அனைத்து அதிகாரமும் கிடைக்கும் நோக்கத்தோடு உருவானதுதான் திராவிட இயக்கம். இந்த இயக்கத்தின் இலக்குகளை மெய்ப்பிக்கும் திராவிட மாடல் ஆட்சியானது திருநர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கி அதிகாரங்களை கொடுத்து அழகு பார்த்து வருகின்றது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்ற மகத்தான ஒரு அறிவிப்பை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

வெறும் அறிவிப்போடு நின்று விடாமல், வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி மன்றங்களில் நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையிலான சட்டத்திருத்தமும் கொண்டு வரப்படும் என்று உறுதியை கொடுத்துள்ளார். இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் இடம்பெறுவது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இனி மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் நிச்சயம் ஒலிக்கும். அதிலும் முக்கியமாக விளிம்பு நிலை மக்களான மாற்றுத் திறனாளிகள் அதிகாரம் பொருந்திய அவைகளில் இடம் பெறுவார்கள் என்று தமிழ்நாடு முதல்வர் உறுதியளித்துள்ளார்.

சமூக நீதி என்பது ஏதோ ஒரு அரசியல் மற்றும் தத்துவக் கோட்பாட்டை மட்டும் குறிப்பது அல்ல. அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான். கல்வி, சுகாதாரம், பெண் உரிமை, பொருளாதார வளர்ச்சி, பாலின சமத்துவம் என அனைத்திலும் முத்திரை பதித்து வரும் தமிழ்நாடு, மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் கொடுக்க முன்வந்திருப்பது என்பது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. நாளை பிற மாநிலங்களும் இதை நிச்சயம் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும். இது மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மாற்றம் காண வழிவகுக்கும். இதற்கான விதை தமிழ்நாடுதான் என்று நாளைய வரலாறு கூறும்.

The post சமூக நீதி அரசு appeared first on Dinakaran.

Read Entire Article