குன்றத்தூர்: தைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாங்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூசத்தை முன்னிட்டு இந்த கோயில் குளத்தில் தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், முதல் நாளான நேற்று மாலை தெப்பத் திருவிழா நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு முன்னதாக கோயில் தெப்பக் குளத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் வெள்ளீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முதலில் மூன்று சுற்றுகள் வெள்ளீஸ்வரரும், அதன் பிறகு ஏழு சுற்றுகள் மாங்காடு காமாட்சி அம்மனும் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வண்ண மின்விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் சுவாமி சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்த ஏராளமான பக்தர்கள் சுழற்சி முறையில் தெப்பத்தில் அமர்ந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு மாங்காடு போலீசாரும், பூந்தமல்லி தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நேற்று ஆரம்பித்து நாளை 12ம் தேதி வரை மொத்தம் மூன்று நாட்கள் இந்த தெப்பத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விழாற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் இணை ஆணையர் சித்ராதேவி மற்றும் கோயில் பரம்பரை தர்மகர்த்தா மணலி சீனிவாசன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
The post தைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் தெப்ப திருவிழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.