தேவர்ஷி கண ஸங்காத ஸ்தூயமானாத்ம வைபவா

2 weeks ago 6

அருள் ஒளி பரப்பும் நாமம்

சென்ற இதழின் தொடர்ச்சி…

ஒரு ஒளி இருக்கிறது. அந்த ஒளியை பார்க்கக்கூடிய ஒரு தன்மை இருக்கிறது. ஒளி இருக்க வேண்டும். அந்த ஒளியை பார்க்கக்கூடிய ஒரு தன்மை இருக்க வேண்டும். இந்த பிரபஞ்சத்தை காண்பிக்கக் கூடியதற்கு நமக்கு ஒரு ஒளி தேவை. உதாரணமாக சூரிய ஒளி தேவை என்று வைத்துக் கொள்வோம். சூரிய ஒளியினால் இந்த பிரபஞ்சம் ஒளி மிகுந்திருக்கும்போது, இதைப் பார்ப்பதற்கு நமக்கு ஒரு கண் தேவை. அந்தக் கண்ணில் ஒரு ஒளி தேவை. நம்முடைய கண்ணில் ஒளி இருந்தால்தான் நாம் அந்த ஒளியை பார்க்க முடியும். அதேபோல் வெளியில் சூரிய ஒளி இல்லையென்றால் நம்மால் எதையுமே பார்க்க முடியாது. இப்போது வெளியில் சூரிய ஒளி இருக்கிறது. ஆனால், நம்முடைய கண்களில் ஒளி இல்லையென்றால் அப்போதும் நம்மால் எதையும் பார்க்க முடியாது. There must be a combination the external light and internal light. இந்த கண்ணுக்குள் இருக்கக்கூடிய internal lightக்கும், வெளியில் இருக்கக்கூடிய சூரிய ஒளி என்கிற external lightக்கும் ஒரு இணைப்பு இருந்தால்தான் நம்மால் பார்க்கவே முடியும்.இப்போது அம்பிகையை நாம் ஆத்ம சொரூபமாக் உணரும்போது, அங்கு இரண்டு விஷயங்கள் நடக்கிறது. அம்பாள் நமக்கு எப்படி இந்த வைபவத்தை நடத்திக் காண்பிக்கிறாள் எனில், அவள் ஸ்வயம் (சுயம்) பிரகாசமாக இருக்கிறாள்.

அவளே ஒளி மிகுந்தவளாக இருக்கிறாள். அதேநேரத்தில் அந்த ஒளியை பார்க்க வேண்டுமெனில் நமக்குள் ஒரு ஒளி வேண்டும். அதனால், ஸ்வயம் பிரகாசமாக இருக்கக் கூடிய அதே அம்பிகை நமக்குள் சித் பிரகாசமாகவும் ஒளிர்கிறாள். அப்போது வெளியில் சர்வ வியாபகமாக, ஸ்வயம் பிரகாசமாக இருக்கக் கூடிய அம்பிகை நமக்குள் சர்வ அந்தர்யாமியாக சித் சொரூபமாக சித் சொரூபிணியாக இருக்கிறாள். இந்த சித் சொரூபத்தினால் நாம் அந்த ஸ்வயம் பிரகாசத்தை தரிசனம் செய்கிறோம். அப்படி தரிசனம் செய்யும்போது, வெளியில் ஒளி மிகுந்து இருப்பதால் திவ்யமாக இருக்கிறாள். தேவர்களால் சேவிக்கப்படுபவளாகவும் இருக்கிறாள். நமக்குள் சித் சொரூபமாக சித் பிரகாசமாக இருப்பதால், த்ருஷ்டமாக பார்க்கப்பவளாக இருப்பதால் ரிஷி கணங்களால் சேவிக்கப்படுபவளாக இருக்கிறாள். இந்த வரிகளை நாம் மீண்டும் மீண்டும் படித்து புரிந்து கொள்ள வேண்டும்.அப்போது இந்த இடத்தில் நமக்கு என்ன தெரிகிறதெனில், பார்க்கப்படுபவளும் அவள்தான். பார்ப்பவளும் அவள்தான். பார்வையும் அவள்தான். அப்போது ஸ்வயம் பிரகாசமாக எங்கும் ஒளி மிகுந்து இருக்கக் கூடியவளும் அம்பிகைதான். நமக்குள் சித் பிரகாசமாக இருக்கக் கூடியவளும் அம்பிகைதான்.

எப்போது இந்த ஸ்வயம் பிரகாசமும் சித் சொரூபமும் சேருகின்றதோ அங்கு வைபவம் நடக்கிறது. என்ன வைபவம் நடக்கிறதெனில், ஆத்ம வைபவம் நடக்கிறது. When there a comnination of this swayam prakasam and chith prakasam. There is aathma vaibavam. அது எப்படியெனில், தூயமானாத்மவ வைபவம். எல்லோரும் ஸ்துதி பண்ணக்கூடிய ஆத்ம வைபவம். அப்போது இங்கு தேவர்கள் என்பது ஒளி மயமான அந்த தன்மையினை குறிப்பிடுகிறது. ரிஷிகள் என்று சொல்வது அந்த ஒளியை பார்க்கக் கூடிய தன்மையை குறிப்பிடுகிறது. பார்வையை குறிக்கிறது. இந்த ஒளியாகவும் பார்வையாகவும் பார்ப்பவளாகவும் இருப்பது அம்பிகையே. சாந்தோக்ய உபநிஷதத்திலே அக்ஷி புருஷ வித்யா என்றொரு வித்யை உண்டு. அந்த அக்ஷி புருஷ வித்யா என்ன சொல்கிறதெனில் சூரியனுக்குள் ஒளி இருக்கிறது. நம்முடைய கண்ணுக்குள்ளும் ஒளி இருக்கிறது. சூரியனுக்குள் ஒளி இருக்கிறதல்லவா, அந்த ஒளியினுக்குள் பரம புருஷன் இருக்கிறான். நம்முடைய கண்ணுக்குள் இருக்கும் ஒளியிலேயும் பரம புருஷன் இருக்கிறான். சூரியனுக்குள் இருக்கக் கூடிய பரம புருஷனும், நம்முடைய கண்ணினுடைய ஒளிக்குள் இருக்கக் கூடிய பரம புருஷனும் ஒன்றுதான் என்று யார் உபாசிக்கிறானோ அவனுக்கு அந்த பரம புருஷனுடைய தரிசனம் கிடைக்கும்.

இதற்குத்தான் அக்ஷி புருஷ வித்யா என்று சாந்தோக்ய உபநிஷத் சொல்கிறது. சாந்தோக்ய உபநிஷதத்தில் வரும் அக்ஷி புருஷ வித்யாவினுடைய ஒரு விளக்கமாகத்தான் இந்த நாமா அமைகின்றது. தேவர்கள் என்று சொல்லும்போது ஒளியை குறிப்பிடுகிறது. நமக்கு காண்பித்து கொடுக்கக் கூடிய எல்லாவற்றையும் பிரகாசப்படுத்தக் கூடிய ஒளியாக இருப்பதால், தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளாக இருக்கிறாள். அப்படி பிரகாசப்படுத்தப்பட்டதை பார்க்கக் கூடியவளாக இருப்பதால், பார்ப்பவர்கள், த்ருஷ்டம் என்று சொல்லக் கூடிய ரிஷிகளால் சேவிக்கப்படுபவளாக இருக்கிறாள். மீண்டும் சொல்கிறோம். தேவர்கள் என்பது ஒளியை குறிப்பிடுகிறது. ரிஷிகள் என்று சொல்லக் கூடியது அந்த ஒளியை நாம் பார்க்கக் கூடிய பார்வையை குறிப்பிடுகின்றது. இந்த ஒளியையும் பார்வையையும் தருபவள் யாரெனில், அவள்தான். தருபவள் மட்டுமல்ல. அந்த ஒளியாக இருப்பவளும் அவள்தான். அந்தப் பார்வையாக இருப்பவளும் அவள்தான். சூரியனுக்குள் ஒளியாக இருப்பவளும் அவள்தான்.

நம் கண்ணுக்குள் ஒளியாக இருப்பவளும் அவள்தான். ஸ்வயம் பிரகாசமாக, சர்வ வியாபகமாக இருப்பவளும் அவள்தான். அந்த ஸ்வயம் பிரகாசத்தை பார்க்கக் கூடிய சித் பிரகாசமாக நமக்குள் சர்வ அந்தர்யாமியாக இருக்கக் கூடியவளும் அவள்தான். இப்படி இருக்கக் கூடிய அந்த அம்பிகையை உணரும்போது அங்குள்ள எல்லா தேவர்களும் ரிஷிகளும் ஸ்துதி பண்ணக் கூடிய ஆத்ம வைபவம் நிகழ்கின்றது. அந்த ஆத்ம வைபவம்தான் லலிதாவினுடைய வைபவம். லலிதாவினுடைய தரிசனம். இதுதான் இந்த நாமத்தினுடைய முழுப் பொருளும் ஆகும். The alignment of external and internal light என்று வைத்துக் கொள்ளலாம். தேவர்கள் என்பது external light. ஒளி. ரிஷிகள் என்பது internal light. பார்வை. இந்த இரண்டும் எங்கு சேர்கிறதெனில், ஆத்ம வைபவம். ஆத்மாவாக இருக்கக் கூடிய லலிதாவை துதிக்கும்போது இரண்டும் சேருகிறது. தேவர்ஷி கண ஸங்காத ஸ்தூயமானாத்ம வைபவா… என்று சேருகிறது. இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.

புராணங்களில் தேவர்களுக்கு அசுரர்கள் வந்து தொந்தரவு கொடுக்கும்போது ரிஷிகள் வந்து தேவர்களின் பக்கம் நிற்பதை பார்க்கிறோம். ஏனெனில், ரிஷிகள் என்கிற இந்த பார்வைக்குத்தான் எது ஒளி, எது இருள் என்று தெரியும். அப்போது சேரும்போதே அங்கு பகவான் அவதாரம் செய்து எல்லா தர்மத்தையும் நிலை நாட்டுவதை பார்க்கிறோம். ஆனால், இங்கு எல்லாமாகவும், பார்வையாகவும் ஒளியாகவும் இருக்கக் கூடியவள் அம்பிகையே ஆவாள். இந்த நாமத்திற்கான கோயிலாக கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள திருக்கோடிக்காவல் ஆகும். த்ரிகோடி தேவதைகள் உபாசனை செய்த இடம். த்ரிகோடி ரிஷி கணங்கள் த்ரிகோடி மந்திரங்களால் உபாசனை செய்த தலம். இந்த தலத்திலுள்ள அம்பாளின் திருநாமம் திரிபுரசுந்தரி. ஈஸ்வரனுடைய பெயர் கோடீஸ்வரர் என்பதாகும். இது துர்வாசரால் பூஜிக்கப்பட்ட தலமாகும். மேலும், எம வாதையின் பிடியிலிருந்து நீக்கும் தலமும் ஆகும். மரணம் என்கிற வாதையை நீக்கியருளும் முக்கிய தலமாகும்.
(சுழலும்)

ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா

The post தேவர்ஷி கண ஸங்காத ஸ்தூயமானாத்ம வைபவா appeared first on Dinakaran.

Read Entire Article