சென்னை: “மக்களின் அன்பை பெற்றவர்கள், மக்களோடு பயணிப்பவர்களுக்கு, தேர்தல் வியூக மன்னா்களால் எவ்வளவு தூரம் பயனிருக்கும் என்பது தெரியவில்லை. எங்களைப் பொருத்தவரையில், நாங்கள் மக்களோடு கூட்டணியை வைத்துள்ளோம்” என்று, தவெக தலைவர் விஜய் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.
சென்னையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (பிப்.11) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செங்கோட்டையன் விழா புறக்கணிப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எழுப்பிய கேள்விக்கு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லவில்லையே. அவருடைய குரல் ஜெயக்குமார்தான் பதில் அளித்துள்ளார். எனவே, இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் மறைந்த முதல்வர்களின் படங்களை அச்சிடாமல் ஏன் புறக்கணித்தீர்கள், என்று கேளுங்கள்.” என்றார்.