தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் பாஜக தலைவர்கள், அமைச்சர்களின் சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.436 கோடி கடன் வசதி: பட்நாவிஸ் அரசு உத்தரவாதம் அளித்ததற்கு எதிர்ப்பு

1 day ago 2

மும்பை: தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் இருக்கும் நிலையில் பாஜக தலைவர்கள், அமைச்சர்கள் நடத்தும் சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.436 கோடி கடனை பட்நாவிஸ் அரசு வாரி வழங்கியதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான பாஜக – சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்திருந்தாலும் கூட, தற்போது கடுமையான நிதி நெருக்கடியை மாநில அரசு சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து மாநில நீர்வள அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் உட்பட பாஜக நிர்வாகிகளுடன் தொடர்புடைய இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.436 கோடி மதிப்புள்ள கடன்களை மாநில அரசு வழங்கியுள்ளது.

இவ்வளவு பெரிய தொகையை மாநில அரசு கடனாக வழங்கியுள்ளதால், மாநிலத்தின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும் என்கின்றனர். ஏற்கனவே மாநில அரசு அதிகபட்ச கடனான ரூ.9.3 லட்சம் கோடியை எதிர்கொண்டுள்ளது. தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து பெறப்படும் கடன்களுக்கு மாநில அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். வாங்கியக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான உத்தரவாதத்தை மாநில கூட்டுறவு அமைச்சர் பாபாசாகேப் பாட்டீல் தலைமையிலான அமைச்சரவை துணைக் குழுவால் அளித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த பிப்ரவரி 18ம் தேதி நடந்த கூட்டத்தில், மாநில நீர்வள அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் தொடர்புடைய பத்ம டாக்டர் விட்டல்ராவ் விகே பாட்டீல் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ரூ.296 கோடி கடனை வழங்க துணைக் குழு அனுமதி அளித்தது.

தொடர்ந்து மார்ச் 20ம் தேதி நடந்த மற்றொரு கூட்டத்தில், மகாய் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ரூ.140 கோடி வழங்க அனுமதிக்கப்பட்டது. இந்த சர்க்கரை ஆலையானது பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சரான திகம்பர் பாகலின் மகள் ரஷ்மி பாகலுடன் தொடர்பானது. மேற்கண்ட இரண்டு கடன்களும் எட்டு ஆண்டுகள் தவணையில் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக எம்எல்ஏ அபிமன்யு பவாருடன் தொடர்புடைய ஷேத்காரி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ரூ.18 கோடி பங்கு மூலதனத்தை நீட்டிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கிராமப்புற பொருளாதாரம் மற்றும் விவசாயிகளுடன் தொடர்புடையதாக இருப்பதால் கடன்கள் வாரி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேநேரம் பாஜக தலைவர்கள், அமைச்சர்களுடன் தொடர்புடைய சர்க்கரை ஆலைகளுக்கு கடன்களை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட சலுகைகளால், மாநில அரசு கடனில் மூழ்கியிருக்கும் நிலையில் மாநிலத்தின் நிதி நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. மேலும் நிதி ஒதுக்கீடு குறைவாக இருப்பதால், மகாயுதி கூட்டணி அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறது. விவசாயக் கடன் தள்ளுபடி, பெண்களுக்கான உதவித்தொகையை மாதத்திற்கு ரூ.1,500-ல் இருந்து ரூ.2,100 ஆக உயர்த்துவது உள்ளிட்ட வாக்குறுதிகள் செயல்படுத்த முடியாமல் தவித்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

The post தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் பாஜக தலைவர்கள், அமைச்சர்களின் சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.436 கோடி கடன் வசதி: பட்நாவிஸ் அரசு உத்தரவாதம் அளித்ததற்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article