தேர்தல் ஆணையம் பதிலளிக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவேன் மகாராஷ்டிரா தேர்தலில் மெகா மோசடி: ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

2 hours ago 1

புதுடெல்லி: மகாராஷ்டிரா வாக்காளர்கள் பட்டியலில் மெகா மோசடி நடந்து இருப்பதாக குற்றம் சாட்டிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் ஆணையம் பதில் அளிக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகப்போவதாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக தேவேந்திர பட்நவிஸ் பொறுப்பேற்றுள்ளார். இந்த தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ், சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ்( சரத்பவார்) சுப்ரியா சுலே, சிவசேனாவின் சஞ்சய் ராவத் ஆகியோர் நேற்று டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ராகுல்காந்தி கூறியதாவது:  மகாராஷ்டிராவில் கடந்த 2019 முதல் 2024 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 32 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கும், சட்டப்பேரவை தேர்தலுக்கும் இடைப்பட்ட 5 மாதங்களில் 39 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களின் போது வாக்காளர் பட்டியல்களை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. இது கடுமையான கேள்விக்குறியை உருவாக்குகிறது. தேர்தலுக்கு முன்னதாக பல வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன அல்லது மாற்றப்பட்டுள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் தலித், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிராவின் வயது முதிர்ந்த மக்கள் தொகை 9.54 கோடி. ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 9.7 கோடி.

மகாராஷ்டிராவில் உண்மையான வாக்களிக்கும் மக்கள் தொகையை விட மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் அதிகம். புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் பெரும்பாலானோர் பாஜவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்த கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும். நாங்கள் வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷனிடம் கேட்டு வருகிறோம். எங்களின் கோரிக்கைக்கு தேர்தல் கமிஷன் இதுவரை பதிலளிக்கவில்லை. ஏதேனும் தவறு இருந்தால் மட்டுமே அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள்.

வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டுவது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. தேர்தல் ஆணையம் பதிலளிக்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக நான் நீதிமன்றத்தை அணுகுவேன். ஏனெனில் மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்ற நிலை உள்ளது. வாக்காளர் பட்டியலின் கட்டுப்பாட்டை தேர்தல் ஆணையம் இழந்துவிட்டது என்று சொல்வதுதான் சரி. நாங்கள் அரசியலமைப்பைப் பாதுகாக்கும் பணியில் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். சிவசேனாவின் சஞ்சய் ராவத் கூறுகையில்,’தேர்தல் ஆணையம் உயிருடன் இருந்தும், அதன் மனசாட்சி சாகவில்லை என்றால், ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் தேர்தல் ஆணையம் அரசாங்கத்திற்கு அடிமை என்று கருதப்படும். அரசின் முகமூடியை தேர்தல் ஆணையம் அகற்ற வேண்டும்’ என்றார்.

ராகுல்காந்தியின் கேள்விகள்
* 5 ஆண்டில் 32 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு, 5 மாதத்தில் 39 லட்சம் பேரை சேர்த்தது எப்படி?
* வயது வந்தோர் 9.54 கோடி, வாக்காளர் பட்டியலில் 9.7 கோடி பேர் இடம் பெற்றது எப்படி?
* மக்களவை, சட்டப்பேரவை வாக்காளர் பட்டியலை இன்று வரை தராதது ஏன்?

* எழுத்துப்பூர்வமாக பதில் தரப்படும்
மகாராஷ்டிராவில் மொத்த மக்கள் தொகையைவிட அதிகமான வாக்காளர்கள் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டிய நிலையில், ராகுலின் பெயரை குறிப்பிடாமல் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில்,‘‘அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் முன்னுரிமை பங்குதாரர்களாக கருதுகின்றது. நிச்சயமாக முதன்மை வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் இருந்து வரும் கருத்துக்கள், பரிந்துரைகள், கேள்விகளை ஆழமாக மதிக்கிறது. இது தொடர்பாக ஆணையம் எழுத்துப்பூர்வமாக முழு உண்மைகளுடன் பதிலளிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.

* டெல்லி படுதோல்வி உணர்ந்ததால் திசை திருப்புகிறார் ராகுல்
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நவிஸ்,’மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் இருப்பதாக ராகுல் காந்தி கூறுவதை ஏற்க முடியாது. மகாராஷ்டிராவில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே பதிலளித்துள்ளது.டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் அவரது கட்சி படுதோல்வி அடையும் என்பதை உணர்ந்ததால் அதை திசை திருப்ப மகாராஷ்டிரா தேர்தலை குறை கூறுகிறார். ராகுல்காந்தி தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும். இல்லை என்றால் காங்கிரஸ் கட்சிக்கு மறுமலர்ச்சி ஏற்படாது’ என்றார்.

The post தேர்தல் ஆணையம் பதிலளிக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவேன் மகாராஷ்டிரா தேர்தலில் மெகா மோசடி: ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article