டோக்கியோ: ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலை நடத்த ஏதுவாக அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. ஜப்பான் பிரதமராக லிபரல் டெமாக்ரடிக் கட்சியை சேர்ந்த புமியோ கிஷிடோ பதவி வகித்து வந்தார். ஜப்பானில் விலைவாசி உயர்வு, அதிகரிக்கும் ஊழல் உள்ளிட்ட காரணங்களால் புமியோவின் செல்வாக்கு குறைந்து வந்தது. நடப்பாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தோல்விகள் கிஷிடோவின் செல்வாக்கை பெருமளவு குறைத்து விட்டது. தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளும் புமியோவுக்கு சாதகமாக இல்லை.
கடந்த செப்டம்பர் மாதம் புமியோவின் பதவிக்காலம் முடிவடைய இருந்த நிலையில் மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என புமியோ கிஷிடா ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதன்படி கடந்த செப்டம்பர் 28ம் தேதி ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைவர் பதவியில் இருந்து புமியோ கிஷிடோ விலகினார். இதைத்தொடர்ந்து பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சர் ஷிகெரு இஷிபா லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து கடந்த 1ம் தேதி ஜப்பான் பிரதமராக ஷிகெரு இஷிபா பதவி ஏற்று கொண்டார்.
அப்போது நாடாளுமன்றத்தில் பேசிய இஷிபா, “புதிய அரசாங்கம் மக்கள் நம்பிக்கையை பெற வேண்டியது அவசியம். அதற்காக விரைவில் தேர்தல் நடத்தப்படும்” என அறிவித்திருந்தார். இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்றத்தை(கீழ்சபையை) கலைத்து பிரதமர் ஷிகெரு இஷிபா நேற்று உத்தரவிட்டார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷிகெரு இஷிபா, “இப்போதைய ஆட்சிக்கு மக்களின் ஆதரவு, அங்கீகாரத்தை பெற நாங்கள் முழுமையாக பணியாற்றுவோம்.
கீழ்சபை கலைக்கப்பட்டாலும் தேசிய பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் நிதி உள்ளிட்ட விவகாரங்களில் அரசாங்கம் முழுமையாக செயல்படும்” என்று தெரிவித்தார். ஜப்பான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் தேர்தல் முடிந்து புதிய அரசு அமையும்வரை இஷிபாவும், அவரது அமைச்சர்களும் பதவியில் நீடிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post தேர்தலை நடத்த ஏதுவாக ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு: பிரதமர் ஷிகெரு இஷிபா அதிரடி appeared first on Dinakaran.