தேனி: தேனியில் பெங்களூரு வியாபாரி கொன்று புதைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் விஜய் கட்சி மாவட்ட செயலாளருக்கு தொடர்பா என போலீசார் விசாரித்து வருகின்றனர். கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர்கள் திலீப் (40), கலுவா (35). இவர்கள் ேதனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் அலங்கார பொருட்கள் விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் திலீப்பை சிலர் காரில் கடத்திச் சென்றதாக தேனி போலீசில் கலுவா புகார் அளித்தார். தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
அதில், பெரியகுளம் அருகே ஜல்லிப்பட்டியில் உள்ள ஒரு புறம்போக்கு நிலத்தில் திலீப்பை கொன்று புதைத்தது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் தேனி போலீஸ் கூடுதல் எஸ்பி கேல்கர் சுப்ரமணிய பாலசந்திரா, பெரியகுளம் தாசில்தார் மருதுபாண்டியன், தாமரைக்குளம் விஏஓ கற்பகவள்ளி ஆகியோர் முன்னிலையில் திலீப்பின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் தேனி மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது.
போலீசார் கூறுகையில், ‘‘தேனி அன்னஞ்சி பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் ஜெயக்குமார். இவரது மகன் சஞ்சய். இவர்களிடம் பெங்களூருவை சேர்ந்த திலீப், கலுவா போலி நகைகளை கொடுத்து ரூ.2 லட்சம் மோசடி செய்து விட்டனராம். கடந்த 15ம் தேதி மோகன்ராஜ் என்பவர் வேலைபார்க்கும் கடைக்கு இருவரும் சென்று பழமையான நகை இருப்பதாக கூறியுள்ளனர். இதுகுறித்து சஞ்சய்க்கு, மோகன்ராஜ் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, சஞ்சய், ஜெயக்குமார் உள்ளிட்டோர் திலீப், கலுவாவை காரில் கடத்தி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள தவெக மாவட்டச் செயலாளரான லெப்ட் பாண்டியின் தென்னந்தோப்பில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து காரில் இருவரையும் ஏற்றிச் சென்றனர். இதில் தென்னந்தோப்பில் அடித்த போது திலீப் இறந்தாரா என விசாரித்து வருகிறோம். மேலும், தவெக நிர்வாகி லெப்ட் பாண்டியின் தோட்டத்திற்கு எதற்காக கொண்டு சென்றனர், இக்கொலைக்கும் அவருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்’’ என்றனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக மோகன்ராஜ் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் பெரியகுளம் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.
The post தேனியில் பெங்களூரு வியாபாரி கொன்று புதைப்பு விஜய் கட்சி மாவட்ட செயலாளருக்கு தொடர்பு? உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை appeared first on Dinakaran.