‘‘தேர்தலுக்கு முன்பாக இலை கட்சியில் தேனிக்காரர் சேர்ந்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராமே முக்கிய நிர்வாகி..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் தேனிக்காரர் அணியில் ஆயில் என தொடங்கும் பெயரிலானவர் மாவட்ட பொறுப்பில் முக்கிய நிர்வாகி இருக்கிறாரு.. இவர், இலை கட்சியில் தேனிக்காரரும் எப்படியும் சேர்ந்து விடுவார் என்ற நம்பிக்கையில் தேனிக்காரருடன் இருந்து வருகிறாராம்.. மாநகரில் உள்ள நிர்வாகிகளிடமும் இதை தான் அந்த முக்கிய நிர்வாகி சொல்லிக்கிட்டு வர்றாராம்.. ஆனால் அவர் கூறும் இந்த வார்த்தைகளை அவருடன் இருக்கும் நிர்வாகிகள் நம்பவில்லையாம்.. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக இலை கட்சியில் தேனிக்காரர் சேராவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அவர்கள் தயாராகி வருகிறார்களாம்.. இதனால் தேனிக்காரர் அணியில் இருக்கும் கொஞ்ச நிர்வாகிகளும், ேதர்தலுக்கு முன்னதாக விலகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என அவர்களது அணியிலேயே பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி தலைவருக்கு பர்த்டே வாழ்த்து சொல்லப்போன மாங்கனி எம்எல்ஏ எதிர்கால கூட்டணி குறித்து சில ரகசிய தகவலை மேலிடம் சொன்னதாக கூறினாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியுடன் கூட்டணியில் சேர மாம்பழ கட்சி ரொம்பவே கணக்கு வழக்கு பார்க்க வேண்டியது இருக்குதாம்.. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இலைக்கட்சியுடன் கூட்டணி சேர்வது உறுதியான நிலையில், திடீரென மலராத கட்சியுடன் ஒட்டிக்கிட்டாங்க.. இதனால ரொம்பவே ஷாக்கானது இலைக்கட்சி தலைவர்தானாம்.. கேட்டதை எல்லாம் கொடுப்பேன் என்றேனே என கூறி வேதனைப்பட்டாராம்.. இந்தநிலையில்தான், ஒன்றிய டெல்லி மந்திரி, கூட்டணி ஒப்பந்தத்தை ஏற்படுத்த கடந்த மாதம் சென்னை வந்தாராம்.. அவருடன் கைகோர்ப்பதாக சின்ன தலைவர் ஒத்துக்கிட்டாராம்.. எந்த கூட்டணியாக இருந்தாலும் தைலாபுரத்துக்கு வந்து போவதுதானே உலக வழக்கம்? நாம் ஏன் அங்கே போகணும் என்று கேள்வி கேட்டதோடு, கட்சி தலைவர் பதவியை நிறுவனர் பறித்து விட்டாராம்.. இவ்வாறாக தந்தை, மகனுக்கு இடையே மோதல் முற்றியதோடு அப்படியேத்தான் இன்னும் இருக்குதாம்.. டெல்லி தலைமையை ஏற்பதை விட, இலைக்கட்சி தலைவருடன் சென்றால் கேட்கும் தொகுதி கிடைப்பதுடன், செலவுக்கு கைநிறைய துட்டும் கிடைக்கும் என்பதுதான் மாம்பழ கட்சியில் அனைவரோட ஆசையா இருக்குதாம்.. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இலைக்கட்சி தலைவருக்கு பர்த்டே வாழ்த்து சொல்ல போனாராம் மாம்பழ கட்சியோட மாங்கனி நகர மேற்கு எம்எல்ஏ வீட்டுக்குள் போனதும் இலைக்கட்சி தலைவரின் பாதம் தொட்டு வணங்கியதுடன், உங்களால்தான் இந்நிலைக்கு உயர்ந்தேன், அதை எப்போதும் மறக்க மாட்டேன்னு கூறியதை கேட்ட இலைக்கட்சி தலைவர், இந்த காலத்தில் இப்படியும் ஒரு விசுவாசமா என நெகிழ்ந்து போனாராம்.. எதிர்கால கூட்டணி குறித்து சில ரகசிய தகவலை மேலிடம் சொன்னதாக சொன்னாராம் அந்த மேற்கு.. கட்சியோட மாநாடு முடிந்ததும் ரெண்டு தலைவர்களையும் சந்திக்க வருவதாக இலைக்கட்சி தலைவர் சொன்னாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கிரிவலம் மாவட்டத்துல இலை பார்ட்டியில் கோஷ்டி பூசலால் ஒரு மாதமாக முயற்சி செய்தும் பூத் கமிட்டி அமைக்க முடியலையாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டத்துல இலை பார்ட்டியோட ஈஸ்ட் மாவட்ட செக்ரட்ரியாக பெயரில் நிலவை கொண்டவரு இருக்குறாரு.. அதேபோல கிரிவலம் நகரத்துக்கு செக்ரட்ரியாக செல்வமானவரு இருக்குறாரு.. இவங்களுக்கு எல்லா மாவட்டங்களை போல, பூத் கமிட்டி கிரிவலம் மாவட்டத்துலயும் அமைக்க தலைமை உத்தரவு போட்டிருக்குது.. ஒரு மாதமாக பூத் கமிட்டி அமைக்க முயற்சி செய்தும், ரத்தத்தின் ரத்தங்கள் யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவே மாட்டேங்குறாங்களாம்.. இதற்கிடையில ஏற்கனவே கிரிவலம் மாவட்டத்துல செக்ரட்ரியாக இருந்த 3 எழுத்துக்காரர் ஒருத்தரு திரும்பவும் மாவட்ட செக்ரட்ரியாக முயற்சி செய்து வர்றாராம்.. இப்படி கிரிவலத்துல எலக்ஷன் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடிேய இலை கட்சியில கோஷ்டி பூசல் தொடங்கிடுச்சாம்.. இதேபோலத்தான் மாவட்டம் முழுவதும் கோஷ்டி பூசல் இருக்குறதாக கட்சிக்குள்ள இருந்தே பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘தேனிக்காரர் என்ன செய்கிறார் என்றே தெரியாமல் கடும் அதிருப்தியில் இருக்கும் மன்னர் மாவட்ட நிர்வாகிகள் மாற்றுக்கட்சிக்கு தாவி விடலாமா என ஆலோசனையில் இறங்கிட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மன்னர் மாவட்டத்தில் தேனிக்காரர் அணியில் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக மாஜி நகராட்சி மன்ற தலைவரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளராக மாஜி எம்எல்ஏவும் நியமிக்கப்பட்டாங்களாம்.. புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு பின்னர் மன்னர் மாவட்டத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஒருமுறை கூட தேனிக்காரர் வராததால் புதிய நிர்வாகிகள் கூட யாரும் நியமிக்கப்பட வில்லையாம்.. இதனால் நிர்வாகிகள் அனைவரும் தேனிக்காரர் மீது கடும் அதிருப்தியில் இருக்காங்களாம்.. மன்னர் மாவட்டத்தை பொறுத்தவரை நிர்வாகிகள் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றால் யார் செலவு செய்வது, மாவட்டத்துக்குள் யார் அதிகாரம் செலுத்துவது என்று மாவட்ட பொறுப்பாளர்களுக்குள்ளே கருத்துவேறுபாடு இருந்து வருகிறதாம்.. தேனிக்காரர் என்ன செய்கிறார் என்று மாவட்ட பொறுப்பாளர்களுக்கே தெரிவதில்லை.. தேனிக்காரரை நம்பி தற்போது திசை தெரியாமல் இருந்து வருகிறோம். தேனிக்காரர் அணியில் நீடிக்கலாமா அல்லது மாற்று கட்சிக்கு தாவி விடலாமா, எது இருந்தாலும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே முக்கிய முடிவு எடுத்து விட வேண்டும் என நிர்வாகிகள் ஆலோசனையில் இருக்காங்களாம்.. இந்த டாப்பிக் தான் மாவட்டத்துக்குள் அரசல் புரசலாக ஓடிக்கிட்டு இருக்கு..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post தேனிக்காரர் ஆதரவாளர்கள் மாற்றுக் கட்சிக்கு தாவும் முடிவில் இருப்பதைப் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.