தேனிக்காரரின் வலதுகரமான மாஜி அமைச்சரை வளைக்கும் முயற்சியில் சேலத்துக்காரர் டீம் இறங்கியிருப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

3 days ago 3

‘‘சர்ச்சை பேச்சு புகழ் மலராத கட்சியின் புதிய மாவட்ட தலைவர் ஒருவருக்கு எந்தவித ஒத்துழைப்பும் கொடுக்காமல் தலையை காட்டிவிட்டு நிர்வாகிகள் எஸ்கேப் ஆகிவிடுறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘லிங்கசாமியின் பெயரைக் கொண்ட நதி மாவட்ட மலராத கட்சியில் மாவட்ட நிர்வாகி நியமனத்தில் இருந்தே மாவட்டத்திற்குள் கடும் புகைச்சல் இருந்துக்கிட்டு இருக்கு.. சர்ச்சை பேச்சு புகழ் மாஜி தேசிய செயலாளரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மாவட்டம், தற்போது மாஜி போலீஸ்காரரின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டதாம்..

மாவட்டத்தில் உள்ள சீனியர்கள் பலரும் சர்ச்சை பேச்சுக்காரரின் ஆதரவாளர்கள் என்பதால், கட்சியினருக்கே அதிக அறிமுகம் இல்லாத ஒரு நபரை மாவட்ட தலைவராக்கி விட்டார் மாஜி போலீஸ்காரர்.. தனது நடைபயணத்தின்போது தொழிலதிபர்களை சந்தித்து அதிகளவு நிதியை வசூல் செய்து கொடுத்ததற்கு நன்றியாக, அவருக்கு பதவியை கொடுத்துள்ளாராம்.. இதனால் மாஜி போலீசுக்கு நெருக்கடி கொடுக்கும்விதமாக மறைமுக நடவடிக்கைகளில் சர்ச்சை பேச்சுக்காரர் ஈடுபட்டுள்ளாராம்..

இதன் முதல்கட்டமாக புதிய தலைவருக்கு, கட்சியினர் யாரும் எந்தவித ஒத்துழைப்பும் ெகாடுப்பதில்லை என்ற முடிவு எடுத்திருக்காங்களாம்.. அவரின் போன் அழைப்பை கூட யாரும் எடுப்பதில்லையாம்.. கட்சி கூட்டம் என அழைத்தாலும் செல்வதில்லையாம்.. அப்படியே வந்தாலும் தலையை காட்டியாச்சு… கிளம்பலாமா என எஸ்கேப் ஆகிவிடுகின்றனராம்.. மாவட்டத்தில் தாமரைக்கட்சி தொடர்ந்து தேய்மானம் ஆவதால் அக்கட்சி நிர்வாகிகள் கவலையில் மூழ்கிக்கிடக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எஸ்ஐ ஒருத்தர் வசூல் வேட்டை செய்தே ரூ.1 கோடிக்கு வீடு வாங்கிட்டதா சக காவல் துறையினரே முணுமுணுக்கிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மான்செஸ்டர் மாநகரில் 2 எஸ்ஐக்கள் வசூல் வேட்டையில் கலக்கிட்டு வருகிறார்களாமே.. ஆமா.. காட்டூரில் எஸ்ஐயாக இருந்து வந்தவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாடி மருத்துவமனை விவகாரத்தில் ரவுடிகளுக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்து செய்து லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதித்து வந்தாராம்..

அப்போதைய இலைக்கட்சி விஐபி ஆதரவோடு மாநகரில் வலம் வந்து கொண்டிருந்ததால் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியலையாம்.. இப்ப வடக்கு துணை கமிஷனரின் சிறப்பு தனிப்படை டீமில் அந்த எஸ்ஐ இணைந்துள்ளாராம்.. இதை பயன்படுத்தி சமீபநாட்களாக வடக்கு பகுதி முழுவதும் என்னோட கட்டுப்பாட்டில் இருக்குதுன்னு சொல்லி வசூல் வேட்டையில் தூள் கிளப்புகிறாராம்.. அதேபோல பீளமேட்டில் இருந்த எஸ்ஐ தற்போது வடக்கு துணை கமிஷனரின் தனிப்படை டீமில் இருக்கிறாராம்..

இவரு வசூல் வேட்டையில் சம்பாதிச்ச பணத்துல ரூ.1 கோடிக்கு வீடு வாங்கிட்டார்ன்னு புகார் எழுந்திருக்கு.. எனவே வடக்கு துணை கமிஷனர் தனிப்படை டீம் மாற்றி அமைக்கலைன்னா பெரிய வில்லங்கத்துல போய் முடியும்னு மான்செஸ்டர் போலீஸ் முணுமுணுக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேனிக்காரர் அணியில் உள்ள மாஜி அமைச்சரை வளைக்கும் முயற்சியில் சேலத்துக்காரர் அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் இறங்கி இருக்கிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘டெல்டா மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் தேனிக்காரரின் ஆதரவாளர்களில் முக்கிய நபராக இருந்து வருகிறார். இவர் தான், தேனிக்காரருக்கு இதுவரை வலதுகரமாக செயல்பட்டு வருகிறாராம்.. தேனிக்காரரை மீண்டும் இலை கட்சியில் சேர்க்க முடியாது என சேலத்துக்காரர் திட்டவட்டமாக கூறி விட்டது தேனிக்காரர் ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.. இதில் தேனிக்காரரின் நெருங்கிய ஆதரவாளரான மாஜி அமைச்சரிடம் இலை கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சிலர் திடீரென நெருக்கம் காட்ட தொடங்கியிருக்காங்க..

இந்த திடீர் நெருக்கத்திற்கான காரணம் புரியாத புதிராக இருந்து வருது.. மாஜி அமைச்சரை வளைக்கும் முயற்சி நடக்கிறதா என்பது தெரிய வில்லை. இருந்தாலும் தேனிக்காரர் அணியினருக்கு சந்தேகம் இருந்து வருகிறது.. விரைவில் இதற்கான நெருக்கம் அப்படி, இப்படி நடந்தாலும் ஆச்சரியமில்லை.. இந்த டாப்பிக் தான் நெற்களஞ்சிய மாவட்டத்தில் அரசல் புரசலாக ஓடுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கனிமக்கொள்ளை வாகனங்களை மறித்து பறிமுதல் செய்ய போனா உங்க அதிகாரிங்கள கவனிச்சிட்டோம்.. நீங்க ஒதுங்கி போங்க.. சரியா பிரேக் பிடிக்காது என மாபியாக்கள் மிரட்டுறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டம் செய்-ஆறுல கனிமகொள்ளை அதிகளவுல நடக்குதாம்.. ஏற்கனவே இதுக்கு காக்கிகள் மாமூலமாக பச்சை கொடி காட்டிட்டு வந்தாங்களாம்.. இப்போது, வருவாய் துறையும் கிரீன் சிக்னல் கொடுத்துட்டாங்களாம்..

இதனால, இரவு நேரங்கள்ல கனிமக்கொள்ளை நடந்தது போக, இப்ப பகல் நேரங்கள்லயும் மெயின் சாலைகளிலேயே கனிமம் கடத்துற வாகனங்கள் தடையில்லாம போகுதாம்.. இதையெல்லாத்தையும் மீறி, சில நேர்மையான அதிகாரிகள், கனிமக்கொள்ளை வாகனங்களை பறிமுதல் செய்ய முயற்சி செஞ்சா, உங்க உயர் அதிகாரிகளை கவனிச்சிட்டோம்.. நீங்கள் ஒதுங்கி போங்க, லாரியில வேற சரியா பிரேக் பிடிக்க மாட்டேங்குதுன்னு மாபியாக்கள் மிரட்டுறாங்களாம்.. கோடையிலயும் செய் ஆறு பகுதியில காக்கிகளுக்கும் ரெவின்யூ டிபார்ட்மெண்ட்டுக்கும், இப்ப கே தாண்டி, எல்வரைக்கும் வசூல்வேட்டை நீண்டுபோய்டுச்சாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post தேனிக்காரரின் வலதுகரமான மாஜி அமைச்சரை வளைக்கும் முயற்சியில் சேலத்துக்காரர் டீம் இறங்கியிருப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article