தேனி: சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவர் தனியார் ஐ.டி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் சித்தார்த் ஓமலூரில் 3வகுப்பு படித்து வருகிறார். மஞ்சுநாதன் ஆண்டுதோறும் சபரிமலைக்கு மாலை அணிந்து தங்கள் உறவுகளோடு சென்று வருவது வழக்கம். மேலும் தனது மகனான சித்தார்த் கன்னிசாமியாக முதல் முறையாக சபரிமலைக்கு விரதம் இருந்து வந்துள்ளார்.
அதன்படி, சேலம் ஓமலூரிலிருந்து மஞ்சுநாதன், சித்தார்த் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் 20ஆம் தேதி சபரிமலைக்கு கிளம்பி வந்துள்ளனர். சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்துவிட்டு நேற்றைய தினம் சொந்த ஊரை நோக்கி திரும்பி வந்துள்ளனர். அவ்வாறு வந்து கொண்டிருக்கும் போது நேற்று நள்ளிரவு தேனி மாவட்டம் சாலையில் பயணித்துள்ளது. அப்போது கார் எதிர்பாராத விதமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து குறியீட்டு கம்பி மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் காரில் பயணித்த 5 நபர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் சித்தார்த்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சித்தார்த் உயிரிழந்துள்ளான். மற்றவர்கள் சிறு காயத்துடன் தப்பியுள்ளனர். இது குறித்து கம்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தேனி மாவட்டம் கம்பத்தில் ஐயப்ப பக்தர்கள் வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து: சிறுவன் பலி appeared first on Dinakaran.