காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் என்ற டிரம்ப் அறிவிப்புக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு

2 hours ago 1

நியூயார்க்: காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 2023, அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். அந்நாட்டின் 251 பேரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 1,195 பேர் இறந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம், காசா மீது குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 15 மாதங்களாக சண்டை நீடித்தது. இதில் பாலஸ்தீனர்கள் 47,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவின் பெரும்பான்மையான பகுதிகள் சேதமாகின. தற்போது வாழ தகுதியற்ற நகரமாக காசா மாறிவிட்டது.

இந்நிலையில், அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் நாடுகளின் தலையீடு காரணமாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மாதம் 15ம் தேதி ஏற்பட்டது. இஸ்ரேல் பிணை கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்து வருகின்றனர். பதிலுக்கு இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களும் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். ஐ.நா முகாம்களில் தங்கியிருந்த பாலஸ்தீன மக்கள் காசாவில் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி இடிபாடுகளுக்கு இடையே வசித்து வருகின்றனர். அவர்கள், நிவார முகாம்களில் உணவு சாப்பிட்டு வாழ்கின்றனர். இந்நிலையில், காசா வாழ தகுதியற்ற நகரமாக உள்ளதால் இங்குள்ள பாலஸ்தீனர்களுக்கு அண்டை நாடுகளான எகிப்து, ஜோர்டான் ஆகியவை அடைக்கலம் அளிக்க வேண்டும் என டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்தார். இது பாலஸ்தீன மக்களை காசாவிலிருந்து அகற்றுவதற்கான திட்டம் என இரு நாடுகளும் மறுப்பு தெரி
வித்தன.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா சென்று அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேசினார். காசா பகுதியில் நிரந்த அமைதியை ஏற்படுத்துவதற்கான வழி குறித்து இருவரும் ஆலோசித்தனர். அதன்பின் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது டிரம்ப் கூறுகையில், ‘காசா பகுதியை அமெரிக்கா சொந்தமாக்கி கொள்ளும். அங்குள்ள வெடிக்காத குண்டுகள் மற்றும் இதர ஆயுதங்களை அகற்றுவோம். காசாவில் உள்ள 20 லட்சம் பேர் மற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டும். காசாவில் இடிந்துள்ள கட்டிடங்களையும் அகற்றி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவோம். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகும், மக்கள் வசிக்கும் பகுதியாகவும் மாறும். மத்திய கிழக்கின் கடலோர சுற்றுலா தலமாக காசா மாறலாம். காசாவுக்கு நான் விரைவில் செல்ல இருக்கிறேன்.

ஆனால் இந்த மறு சீரமைப்பு நடவடிக்கை, துயரங்களை அனுபவித்த அதே மக்கள் மீண்டும் குடியேறுவதற்கான நடவடிக்கையாக இருக்க கூடாது’ என்றார். ட்ரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் டிரம்பின் அறிவிப்பை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அமெரிக்கா, இஸ்ரேலின் மிக சிறந்த நட்பு நாடு. அமெரிக்க அதிபரின் காசா திட்டம் வரலாற்றை மாற்றும். இத்திட்டத்தில் கவனம் செலுத்துவது அனைவருக்கும் நல்லது’ என்றார்.

அமெரிக்காவின் அறிவிப்பை அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் நிராகரித்துள்ளனர். இதுகுறித்து பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கூறுகையில், ‘பல ஆண்டுகளாக போராடி, உன்னத தியாகங்களை செய்த பாலஸ்தீன மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம். பாலஸ்தீன மக்கள் தங்கள் நிலம், உரிமைகள் மற்றும் புனித தலங்களை விட்டு கொடுக்க மாட்டார்கள். காசாவை அமெரிக்கா கைப்பற்றினால், அது கடுமையான சர்வதே விதிமுறை மீறலாக இருக்கும்’’ என்றார். மேலும் சீனா, சவுதி, துருக்கி, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளும் டிரம்பின் அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

The post காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் என்ற டிரம்ப் அறிவிப்புக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article