தேனி ஆவினில் தீபாவளி இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுவதில்லை - ஆவின் நிறுவனம் விளக்கம்

3 months ago 19

சென்னை,

தேனி ஆவின் பால் பண்ணையில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் சுகாதாரமற்ற முறையில் பாலை பதப்படுத்துவதும், பால்கோவா தயாரிப்பதும் தெரிய வந்ததால் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தேனி பால் பண்ணைக்கு எந்த ஆய்வுக்கும் வரவில்லை என்றும் ஆவினின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக சிலர் வேண்டுமென்றே பழைய செய்திகளை பரப்பி வருகின்றனர் என்றும் ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய (FSSAI) அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் தேனி மாவட்ட பால் பண்ணையை ஆய்வு செய்து சில அறிவுறுத்தல்கள் கொடுத்தனர். அவை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டு பதில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

அதற்கு பின்பு எந்த ஆய்வுக்கும் FSSAI அதிகாரிகள் தேனி பால்பண்ணைக்கு வரவில்லை. தற்பொழுது வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தேனி ஆவினில் பால்கோவா மற்றும் பாதாம் பவுடர் மட்டுமே வாரத்தில் ஒரு நாள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு மற்றும் காரவகைகள் திண்டுக்கல் மற்றும் மதுரை ஆவினில் இருந்தே வருகிறது. தேனி ஆவினில் தீபாவளி இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுவதில்லை.

ஆவினின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக சிலர் வேண்டுமென்றே பழைய செய்திகளை பரப்பி வருகின்றனர். தரமான பொருட்களை சரியான விலையில் வழங்குவதே ஆவினின் நோக்கம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article