“தேசியக் கல்விக் கொள்கை எனும் மதயானை” நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை முதல்வரிடம் வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஷ்

1 week ago 5

சென்னை: அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதியுள்ள “தேசியக் கல்விக் கொள்கை எனும் மதயானை” நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். இதுகுறித்து மேலும் அமைச்சர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;

“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நான் எழுதியுள்ள “தேசியக் கல்விக் கொள்கை எனும் மதயானை” நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கி வாழ்த்துகள் பெற்றோம்.

ஒன்றிய பா.ஜ.க. அரசு சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய தேசியக் கல்விக் கொள்கையை நம்மீது திணிக்கும் முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. ஆசிரியப் பெருமக்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் பாதகத்தை தேசியக் கல்விக் கொள்கை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த முதலமைச்சர் “எக்காரணத்தைக் கொண்டும் ஏற்க மாட்டோம்” என உறுதியோடு எதிர்த்து வருகிறார்.

இக்கல்விக் கொள்கையை முன்னிறுத்தி நமக்கான கல்வி நிதியை தர மறுப்பது போன்ற அராஜகப் போக்கை ஒன்றிய அரசு கையில் எடுத்துள்ளது.

இச்சூழலில் தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கத்தில் RSS போன்ற மதவாத அமைப்புகளின் பங்களிப்பு என்ன? இதனால் ஆசிரியர்களுக்கு என்ன பாதிப்பு? ஏழை எளிய மாணவர்களை கல்வியில் இருந்து இது வெளியேற்றும் என ஏன் சொல்கிறோம்? போன்ற பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு மக்களில் ஒருவராக இருந்து விளக்குவது நமது கடமையாகும். இதன் விளைவாக “தேசியக் கல்விக் கொள்கை எனும் மதயானை” நூலினை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளேன். வரும் 17ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதலமைச்சர் இந்நூலினை வெளியிட்டு விழா பேருரையாற்றுகிறார். நாடாளுமன்ற நிலைக்குழுத்(கல்வி) தலைவர்-மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக்விஜய சிங் நூலினைப் பெற்றுக்கொள்கிறார். உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி கோபால கவுடா, இஸ்ரோ மேனாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

தேசியக் கல்விக் கொள்கையின் தீமைகளை மக்களிடம் எடுத்துச் செல்வோம். இந்நூலை அன்பில் பதிப்பகம் சார்பாக பதிப்பிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

The post “தேசியக் கல்விக் கொள்கை எனும் மதயானை” நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை முதல்வரிடம் வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.

Read Entire Article