சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் 82 ஆயிரத்து 257 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 576.32 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதன் முறையாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிறப்பு பார்வையாளர்களாக மாவட்டங்களுக்கு சென்று லோக் -அதாலத்தை தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இந்தாண்டுக்கான கடைசி தேசிய லோக் அதாலத் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான கே.ஆர் ஸ்ரீராம் அறிவுறுத்தலின்படி, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரும் நீதிபதியுமான எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் உயர் நீதிமன்ற சட்டப்பணி கள் ஆணைக்குழு தலைவரான நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் ஆகியோரது மேற்பார்வையில் நடத்தப்பட்ட இந்த லோக்-அதாலத்தில் சென்னை உயர் நீதிமன்றத் தில் 8 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 4 அமர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன.