தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ் நிலை என்ன? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

4 days ago 4

சென்னை,

தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை அண்மையில் மாற்றப்பட்டார். கட்சியின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிரடி அரசியலுக்கு பெயர் போன அண்ணாமலைக்கு தற்போது தேசிய அளவில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் 9 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைமையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு ஏதுவாக அண்ணாமலை மாற்றப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: -

2026 சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கும் ஓ பன்னீர் செல்வத்திற்கும் சீட் ஒதுக்குவது தொடர்பாக அதிமுகவுடன் ஆலோசனை செய்து ஒருங்கிணைந்து முடிவு செய்யப்படும். சீட் பங்கீடு குறித்து எங்கள் கட்சியின் ஆட்சி மன்றக்குழுதான் முடிவு செய்யும். சீட் ஒதுக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவும் குழு அமைக்கும். ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணியுடன் உறுதியாக நின்றார்கள். எனவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் யாரெல்லாம் இருந்தார்களோ அவர்கள் தொடர்ந்து கூட்டணியில் நீடிப்பார்கள். அண்ணாமலை தனது தனித்துவமான ஸ்டைலில் கட்சியை நன்றாக வளர்த்துள்ளார். கட்சி தனது இலக்குகளை அடைய எனது மென்மையான அணுகுமுறை ஒருபோதும் பிரச்சினையாக இருக்காது" என்றார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோரை ஒருபோதும் கட்சியில் இணைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க பாஜக தலைமை முயற்சி மேற்கொண்டதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Read Entire Article