'தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் மேலும் அதிகரித்துள்ளது' - அண்ணாமலை

6 days ago 3

சென்னை,

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் அதிகாரி சக்ரவர்த்தி நேற்று முன்தினம் வெளியிட்டார். இதையடுத்து, பா.ஜ.க.வின் தமிழக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார். அதனை பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் பெற்றுக் கொண்டார்.

நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனுத்தாக்கல் செய்த நிலையில், தமிழக பா.ஜ.க.வின் 13-வது மாநில தலைவராக அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, நயினார் நாகேந்திரனை தமிழக பா.ஜ.க.வின் புதிய மாநில தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"தமிழகத்திற்கு நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகை தந்த சமயத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் மேலும் அதிகரித்துள்ளது. 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவர் அறிவிக்கப்படுகிறார். இந்த புதிய தலைவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தமிழக பா.ஜ.க.வை வழிநடத்தி, 2026 தேர்தலில் தி.மு.க.வை அகற்றுவதற்கு முன்னோடியாக இருப்பார்.

பா.ஜ.க.விற்காக உயிர்கொடுத்த தலைவர்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். தமிழக பா.ஜ.க.வுக்கு இலக்கு தெரியும், பாதையும் தெரியும். இந்த கட்சிக்கு ஒரு ஆன்மா இருக்கிறது என்று தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் என்னிடம் கூறினார். இப்போது அந்த ஆன்மா, கட்சிக்கான புதிய தலைவரை அடையாளம் காட்டியுள்ளது.

யார் தலைவராக வந்தாலும் முழுமனதாக ஏற்றுக்கொண்டு அவர்களோடு சேர்ந்து பயணிக்கும் தொண்டர்களை கொண்டது பா.ஜனதா கட்சி. திருநெல்வேலி சீமையை சார்ந்தவரான நயினார் நாகேந்திரனுக்கு நாம் துணையாக நின்று, 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வர அயராது பாடுபடுவோம்."

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார். 

Read Entire Article