டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் முதல்வர்களுடன் வரும் 25ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவம், பாகிஸ்தானின் அடுத்தடுத்த தாக்குதல்களை முறியடித்து, அந்நாட்டின் விமான தளங்களை தாக்கின. இரு நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், ஆளும் ஒன்றிய அரசின் பாஜக தலைமை, ‘திரங்கா யாத்திரை’ என்ற பெயரில், தீவிரவாதத்திற்கு எதிரான ஒன்றிய அரசின் உறுதியான நிலைப்பாட்டையும், தேசியவாதத்தையும், ஒற்றுமையையும் வளர்க்கவும் நேற்று முதல் வரும் 25ம் தேதி வரை பேரணிகளை நடத்த முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் ஒன்றியத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடப்பதால், ஒன்றிய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 25ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பாஜக மற்றும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து மாநில முதல்வர்கள், துணை முதல்வர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திரப் பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் மற்றும் பதிலடி உள்ளிட்ட விசயங்கள் குறித்து கூட்டணி தலைவர்களுடன் பிரதமர் மோடி எடுத்துரைப்பார் என்று பாஜக தலைமை வட்டாரங்கள் தெரிவித்தன.
The post தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் முதல்வர்களுடன் 25ம் தேதி பிரதமர் மோடி சந்திப்பு appeared first on Dinakaran.