மும்பை,
பிரபல இந்திய தொழில் அதிபர் மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் நேற்றிரவு சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 86.
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பழம்பெரும் தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் உடல் மீது இந்திய தேசிய கொடி போர்த்தப்பட்டு உள்ளது. போலீசாரின் இசைக்குழுவினர், இறுதி ஊர்வலத்திற்கான இசையை இசைத்தபடி முன்னே சென்றனர்.
அவருடைய உடல் மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி டாடா அறக்கட்டளை வெளியிட்டு உள்ள அறிவிப்பு ஒன்றில், ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கும் என தெரிவித்து உள்ளது.
ஒர்லியில் உள்ள டாக்டர் மோசஸ் சாலையில் உள்ள வழிபாட்டு அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்படும். இதன்பின்பு, தகன பகுதிக்கு கொண்டு செல்லப்படும் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. பொதுமக்கள், தேசிய மையத்தின் வாயில் 3-ன் வழியே சென்று, வாயில் 2 வழியே வெளியேறும்படி கேட்டு கொள்ளப்படுகிறது. வாகனங்களை நிறுவத்துவதற்கு இடவசதி இல்லை என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. ரத்தன் டாடா உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு வருகின்றனர்.