
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகையும் ஒன்றாகும். உயிர்ப்பு விழா என்று அழைக்கப்படும் இந்த பண்டிகையை கிறிஸ்தவர்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்பு, மன்னிப்பு ஆகியவற்றை மட்டுமே போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ சொந்தங்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரமுண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குதத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் நடைபெற்றே தீர வேண்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அருளப்பட்டிருக்கிறது. அதன்படி, அனைத்து மக்களுக்கும், அனைத்து நன்மைகளும் நடக்க வேண்டிய நேரத்தில் நிச்சயமாக நடந்தே தீரும் என்பது உறுதி.
இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டதும், பின்னர் உயிர்த்தெழுந்து வந்ததும் தனிமனிதரின் வாழ்க்கை அனுபவமல்ல. அது உலகிற்கே சொல்லப்பட்ட பாடம் ஆகும். வாழ்க்கையில் எப்போதும் நன்மையையே செய்யுங்கள்; அதனால் இடையில் சோதனைகள் வந்தாலும் நிறைவில் நன்மையே நடக்கும் என்று உலக மக்களுக்கு நற்செய்தி சொல்வதற்கான நிகழ்வுதான் புனித வெள்ளியும், உயிர்த்தெழுதல் திருநாளும் ஆகும். அதுமட்டுமின்றி, இருள் விரைவாகவே நீங்கும் என்பதும் ஈஸ்டர் திருநாள் சொல்லும் செய்தியாகும்.
ஈஸ்டர் திருநாளின் நோக்கத்தைப் போலவே தமிழ்நாட்டு மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர வேண்டும்; வளர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவை பெருக வேண்டும் என்று கூறி, கிறிஸ்தவ சொந்தங்களுக்கு மீண்டும் ஒருமுறை ஈஸ்டர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்று போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளை கொண்டாடும் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் இன்றையத் தேவை கருணை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் குணம், அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுதல் ஆகியவைதான். அதை வலியுறுத்தும் திருநாள்தான் ஈஸ்டர் திருநாள் ஆகும்.
ஈஸ்டர் நாளில் பரிசளிக்கப்படும் முட்டைகளில் இனிப்புகளும், மிட்டாய்களும் நிறைந்திருக்கும். அவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவை. மாறாக, சமூகத்திற்கு வழங்கப்படும் ஈஸ்டர் முட்டைகளில் அன்பு, கருணை, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவை நிறைந்திருக்க வேண்டும். அதுதான் ஒட்டுமொத்த உலகத்தையும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்.
ஈஸ்டர் திருநாள் தெரிவிக்கும் செய்தியை பின்பற்றும் வகையில் நாம் அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும்; தவறு செய்தவர்களை மன்னிக்க வேண்டும். அத்துடன், உலகம் ஒரு குடும்பமாக வாழ்வதற்கு தேவையான அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், அமைதி, வளம், மகிழ்ச்சி ஆகியவை தழைக்க பாடுபடுவதற்கு அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.