தேசிய கீதம் பாடும் விவகாரத்தில் அவதூறு கிளப்பும் ஆளுநர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

4 months ago 11

சென்னை: தேசிய கீதம் பாடும் விவகாரத்தில், ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஆளுநர் ரவி தன்னுடைய எக்ஸ் பதிவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது முதலமைச்சர் பதவியை குறிப்பிடாமல் ஒரு தனி மனிதராக பாவித்து ஒரு பதிவிட்டுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியதாகும். தமிழ்நாட்டின் மரபின்படி தான் நிகழ்வின் இறுதியில் தேசிய கீதம் பாட முடியுமென்று சொன்னதை, தேசிய கீதமே பாட முடியாது என்று சொன்னதாக புரளி கிளப்புகிறார். நாளை வருகிற இன்னொரு ஆளுநர் இன்னொரு நேரம் பாட வேண்டுமென்று கேட்டால் அப்படி செய்ய முடியுமா? மேலும், இதனால் அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்பு செய்துவிட்டார்கள்.

அவர்கள் தத்துவமே அப்படித்தான் என்று பதிவிடுவது எல்லாம் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். பாணி திசைதிருப்பல் வேலையே. ஆளுநரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‘திராவிட மாதிரி என்று எதுவும் இல்லை, திராவிடத் தத்துவம் காலவாதியாகிவிட்டது’ என்று ஒரு நாளிதழுக்கு கொடுத்த பேட்டியை முதன்மைப்படுத்தி வைத்திருக்கும் அளவிற்கு அத்துமீறி நடந்து கொள்பவர் என்பதையும் அதைப் பெருமையாக கருதிக் கொண்டிருப்பவர் என்பதையும் காண முடிகிறது. ஆளுநராக நியமிக்கப்பட்டாலே வானளாவிய அதிகாரம் இருப்பதாக கருதிக் கொண்டு அடாவடி செய்வதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

 

The post தேசிய கீதம் பாடும் விவகாரத்தில் அவதூறு கிளப்பும் ஆளுநர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article