பாகிஸ்தானுக்கு ட்ரோன் சப்ளை செய்ததால் துருக்கி நிறுவனம் உடனான மெட்ரோ ஒப்பந்தம் ரத்து?: மத்திய பிரதேச அமைச்சர் அறிவிப்பு

3 hours ago 3

போபால்: பாகிஸ்தானுக்கு ட்ரோன் சப்ளை செய்ததால் துருக்கி நிறுவனம் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய பிரதேச அமைச்சர் தெரிவித்தார். இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர் உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளன. இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருவருதற்கு சில நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன.

அந்த வகையில், இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் செயல்களில் புவனேஷ்வர் மற்றும் இந்தூர் நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ திட்டங்களின் டிஜிட்டல் அமைப்புகளில் துருக்கி நிறுவனமான ஆசிஸ் கார்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உடனான ஒப்பந்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசா அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்கு காரணம், மேற்கண்ட துருக்கி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள், பாகிஸ்தானுக்கு சப்ளை செய்யப்படுவதாகவும், அந்த ட்ரோன்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய பிரதேச மாநில அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா அளித்த பேட்டியில், ‘இந்த விவகாரத்தை மாநில அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான மனப்பான்மைக்கு இங்கு இடமில்லை.

இந்திய இறையாண்மைக்கு எதிராக நிற்பவர்களுடன் எந்தவித ஆதரவோ ஒத்துழைப்போ ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று கூறியுள்ளார். ஆசிஸ் கார்டு நிறுவனத்தின் ட்ரோன்கள், இந்தியாவுக்கு எதிரான செயல்களில் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த நிறுவனம் தற்போது புவனேஷ்வர் மற்றும் இந்தூர் மெட்ரோ திட்டங்களில் டிஜிட்டல் அமைப்புகளுக்கான ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்கு முன்னர், துருக்கியைச் சேர்ந்த செலிபி ஏவியேஷன் நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை, தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக ஒன்றிய அரசு ரத்து செய்தது. இந்த நிறுவனம், 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் 10,000க்கும் மேற்பட்டோரை வேலைக்கு அமர்த்தி, ஒன்பது விமான நிலையங்களில் சேவை வழங்கி வருகிறது. செலிபி ஏவியேஷன், இந்திய விமானப் போக்குவரத்து, தேசிய பாதுகாப்பு மற்றும் வரி விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுவதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

The post பாகிஸ்தானுக்கு ட்ரோன் சப்ளை செய்ததால் துருக்கி நிறுவனம் உடனான மெட்ரோ ஒப்பந்தம் ரத்து?: மத்திய பிரதேச அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article