
விருதுநகர்,
விருதுநகரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் இடஒதுக்கீடு மீட்பு கருத்தரங்கம், கட்சி நிர்வாகிகள் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. இதில் அந்த கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்று பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
தமிழ் குடிகளின் இடஒதுக்கீடு பறிக்கப்பட்டு ஒரு சாதிக்கு மட்டும் அதிகமாக கொடுக்கப்படுகிறது. உள்ஒதுக்கீடு என்ற பெயரில் உள்குத்து செய்கிறார்கள். இதை தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் சரிசெய்வதாக இல்லை. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற முயன்றால் போராட்டங்கள் நடத்தப்படும்.
தேசிய அளவில் உருவாக்கப்படும் கல்விக் கொள்கையின் அடிப்படையில்தான் மாநில அரசின் கல்விக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். அதற்கு நேர்மாறாக இருக்கக்கூடாது. ஒரு மொழியை கற்கக்கூடாது என சொல்வதற்கு மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. வசதியானவர்களின் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் எந்த விதமான கொள்கையும் இல்லை. ஏழை மக்களின் குழந்தைகளுக்கு மும்மொழி வழங்கக்கூடாது எனக்கூறுவது எந்த வகையில் நியாயம்?
இந்தியை யாரும் திணிப்பதில்லை. மத்திய அரசின் பாடத்திட்டத்தில் 8-ம் வகுப்பு வரை மட்டுமே இந்தி கற்றுக்கொடுக்கிறார்கள். 21-ம் நுாற்றாண்டில் ஏ.ஐ. தொழில்நுட்பங்கள் உருவாகியுள்ள காலகட்டத்தில் பல மொழிகளை கற்றுக்கொண்டால்தான் வாய்ப்புகள் உருவாகும். ஜப்பான், ஜெர்மன், பிரெஞ்சு, லத்தீன், ரஷிய மொழிகளை கற்றுக்கொண்டால் உலகளாவிய வேலைவாய்ப்புகளை நோக்கி மாணவர்கள் நகர முடியும்.
தேசிய கல்விக் கொள்கை சர்வதேச தரத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏழை குழந்தைகளின் வாழ்க்கையோடு தமிழக அரசு விளையாடக்கூடாது. இந்தியா முழுவதும் ஏற்றுக்கொண்ட தேசிய கல்விக்கொள்கையை ஏற்பதில் மாநில அரசுக்கு என்ன கஷ்டம்? விருதுநகர் மாவட்டத்தில் கனிம வள விவகாரங்களில் அதிக முறைகேடு நடந்து வருகிறது. சிவகாசியில் அடிக்கடி நடக்கும் பட்டாசு விபத்துகளை தடுக்க தீர்வுகள் எதுவும் வகுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.