சென்னை: இந்திய சைக்கிளிங் சம்மேளனம், தமிழ்நாடு சைக்கிளிங் கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து அகில இந்திய 76வது சீனியர், 53வது ஜூனியர், 39வது சப் ஜூனியர் அளவிலான தேசிய டிராக் சைக்கிளிங் போட்டிகளை நடத்தின. மேலக்கோட்டையூர் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில், கடந்த 15ம்தேதி தொடங்கி நேற்று வரை இப்போட்டிகள் நடந்தன. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி தொடங்கி வைத்து கோப்பையை அறிமுகம் செய்திருந்தார்.
இந்த போட்டிகளில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கடந்த 4 நாட்களாக நடைபெற்ற இந்த போட்டிகளில் ராஜஸ்தான் 10 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கல பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. அந்தமான் மற்றும் ரயில்வே துறை ஆகியவை முறையே 5 தங்கப்பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும், தமிழ்நாடு 4 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் இந்திய சைக்கிளிங் அசோசியேசன் தலைவர் மணிந்தர் பால் சிங், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் செயலாளர் வினோத் காந்தி, சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post தேசிய அளவிலான டிராக் சைக்கிளிங் போட்டி நிறைவு 4 தங்க பதக்கம் வென்று தமிழ்நாடு மூன்றாமிடம் appeared first on Dinakaran.